சென்னை,
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு சொந்தமான ரூ.500 கோடி மதிப்பிலான ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்குச் சொந்தமான 150 கிரவுண்டு நிலங்கள் மீட்கப்பட்டுள்ளது. இவற்றின் மதிப்பு ரூ.500 கோடியாகும். கீழ்ப்பாக்கத்தில் ஏகாம்பரநாதர் கோயிலுக்குச் சொந்தமான 49 கிரவுண்டு நிலம் தற்போது மீட்கப்பட்டுள்ளது. கோவிலுக்குச் சொந்தமான இடங்களை கண்டறிந்து ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்டு வருகிறோம். கோவிலுக்குச் சொந்தமான இடங்களை ஒருவர் பெற்று வேறொருவர் பயன்படுத்தி வருவதை கண்டறிந்து அதையும் மீட்டு வருகிறோம். கோவில் இடங்களை புதிதாக ஆக்கிரமிக்க முயல்வதையும் கண்டறிந்து அதையும் முறியடித்து வருகிறோம். சென்னிமலையில் ஓர் ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்கப்பட்டது.
மீட்கப்படும் நிலங்களின் வருமானத்தை கோவிலை நிர்வகிக்கவும், பணியாளர்களுக்கும் செலவிட இருக்கிறோம். கோவில் இடத்தில் வணிக வளாகம் கட்டி அதன்மூலம் வருமானம் ஈட்ட நடவடிக்கை எடுத்து வருகிறோம். இந்து சமய அறநிலையத்துறையை பொறுத்த வரையில் முதல்-அமைச்சர் அவர்கள் வழிகாட்டுதலின் பேரில் ''இறை சொத்து இறைவனுக்கே'' என்னும் தாரக மந்திரத்தோடு, இது போன்ற ஆக்கிரமிப்புகளில் உள்ள நிலங்களை தினந்தோறும் மீட்டு வருகிறோம். சட்டமன்ற மானிய கோரிக்கைகளில் 1000 கோடி ரூபாய் அளவுக்கு இந்து சமய அறநிலையத்துறை சொத்துக்கள் மீட்கப்படும் என அறிவிக்கபட்டிருந்தது. அதன்படி இன்றைக்கு துறை சார்ந்த செயலாளர், ஆணையாளர், இணை ஆணையாளர் உதவியோடு மீட்கப்பட்ட நிலங்களின் மதிப்பு ரூ.1000 கோடியை தாண்டிவிட்டது என்று அவர் கூறினார்.