தமிழக செய்திகள்

தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.5,388 கோடி நிதியை உடனே வழங்குங்கள்

கோர்ட்டு வழக்குகளால் தேர்தல் தாமதம் ஆவதால், அடிப்படை வசதிகளை நிறைவேற்ற தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கான ரூ.5,388 கோடி நிதியை உடனே வழங்குமாறு மத்திய அரசிடம் தமிழக அரசு வற்புறுத்தி உள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

மத்திய நிதி, நிலக்கரி, ரெயில்வே துறை மந்திரி பியூஷ் கோயல் மற்றும் ஊரக மேம்பாடு, ஊராட்சி, சுரங்கங்கள் துறை ராஜாங்க மந்திரி நரேந்திர சிங் தோமர் ஆகியோரை தமிழக உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நேற்று டெல்லியில் சந்தித்து பேசினார்.

அப்போது அவரிடம் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கோரிக்கை மனு ஒன்றை அளித்தார்.

அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

2017-18-ம் ஆண்டில் நகர உள்ளாட்சி அமைப்புகளுக்கு செயல்பாட்டு மானியமாக ரூ.365.37 கோடியையும், அடிப்படை மானியமாக ரூ.1,263.96 கோடியையும் 14-வது நிதிக் கமிஷன் நிர்ணயித்து உள்ளது. அதுபோல ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு முறையே 194.78 கோடியும், ரூ.1,516.12 கோடியும் நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.

அடிப்படை மானியத்தின் முதல் தவணைத் தொகையை மத்திய நிதித்துறை அளித்தபோது, இரண்டாவது தவணைத் தொகையை கொடுப்பது பற்றி பரிசீலிப்பதற்கு முன்பாக, தமிழக உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்கு பற்றி மத்திய அரசிடம் தமிழக அரசு தெரிவிக்க வேண்டும் என்று குறிப்பிட்டது.

தமிழகத்தில் பல்வேறு வழக்குகள் காரணமாக உள்ளாட்சி தேர்தல் காலதாமதம் ஆகிக்கொண்டிருக்கிறது. 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, வார்டுகளின் எல்லையை மாற்றி அமைக்கும் பணியையும் அரசு மேற்கொண்டு உள்ளது.

உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக சென்னை ஐகோர்ட்டு மற்றும் சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்த விளக்கம் மத்திய நிதித்துறைக்கு ஏற்கனவே வழங்கப்பட்டு உள்ளது. வார்டு எல்லையை மாற்றி அமைக்கும் பணி முடிந்த பிறகுதான் உள்ளாட்சி தேர்தல் பற்றிய அறிவிப்பை அரசு வெளியிட முடியும். இந்த தேர்தலுக்காக 2018-19-ம் ஆண்டு பட்ஜெட்டில் ரூ.172.27 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது.

2018-19-ம் ஆண்டுக்கான நகர உள்ளாட்சி அமைப்புகளுக்கு அடிப்படை மானியமாக ரூ.1,462.18 கோடியையும், செயல்பாட்டு மானியமாக ரூ.414.92 கோடியையும்; ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான அடிப்படை மானியமாக ரூ.1,753.18 கோடியையும், செயல்பாட்டு மானியமாக ரூ.221.20 கோடியையும் 14-வது நிதிக்கமிஷன் நிர்ணயித்து உள்ளது.

ஒவ்வொரு ஆண்டு ஜூன் மாதமும் முதல் தவணைத் தொகை அளிக்கப்பட வேண்டும். தற்போது மக்களுக்கான அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதற்கு உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதி தேவைப்படுகிறது.

2017-18-ம் ஆண்டுக்கான நகர உள்ளாட்சி அமைப்புகளுக்கான இரண்டாவது தவணைத் தொகையை அளிப்பதற்கான பரிந்துரையை மத்திய நிதித்துறைக்கு மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை ஏற்கனவே அளித்து உள்ளது.

எனவே நகர மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு 2017-18-ம் ஆண்டுக்கான இரண்டாம் தவணைத் தொகையையும், 2018-19-ம் ஆண்டுக்கான முதல் தவணைத் தொகையையும் (மொத்தம் ரூ.3,558.21 கோடி) அனுமதிக்க தாங்கள் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மேலும், மத்திய ஊரக மேம்பாடு, ஊராட்சி, சுரங்கங்கள் துறை ராஜாங்க மந்திரி நரேந்திர சிங் தோமரிடம் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, தமிழக ஊரக பகுதிகளுக்கு அளிக்க வேண்டிய மானிய தவணைத் தொகை ரூ.1,829.78 கோடி அளிக்குமாறு கோரி ஒரு மனு அளித்தார்.

ஒட்டு மொத்தத்தில் மத்திய அரசிடம் இருந்து தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.5,387.99 கோடி நிதி கோரப்பட்டு உள்ளது.

இந்த சந்திப்பின் போது தமிழக மின்சார துறை அமைச்சர் பி.தங்கமணி, நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை மற்றும் வேணுகோபால், சுந்தரம், மகேந்திரன் உள்ளிட்ட சில அ.தி.மு.க. எம்.பி.க்கள் உடன் இருந்தனர்.

அமைச்சர் பி.தங்கமணி, தமிழகத்துக்கு கூடுதல் நிலக்கரி ஒதுக்குமாறு மத்திய மந்திரி பியூஷ் கோயலிடம் கேட்டுக் கொண்டார்.

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்