தமிழக செய்திகள்

நிவர், புரெவி புயல்களால் பாதிக்கப்பட்ட 5 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.600 கோடி நிவாரணம் - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

நிவர், புரெவி புயல்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ.600 கோடி நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

தமிழகத்தில் நிவர் மற்றும் புரெவி புயல்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குவது குறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

தென்மேற்கு வங்க கடலில் நிலை கொண்டிருந்த நிவர் புயல் 25-11-2020 மற்றும் 26-11-2020-ல் புதுச்சேரி அருகே கரையை கடந்தது. நிவர் புயலின் காரணமாக ஏற்பட்ட சேதங்களை சீரமைக் கும் பணி போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், தமிழ்நாடு புரெவி புயலின் தாக்கத்திற்கு உள்ளானது.

எனது தலைமையிலான அ.தி.மு.க. அரசு மேற்கொண்ட முன்எச்சரிக்கை நடவடிக்கைகளின் காரணமாக, நிவர் மற்றும் புரெவி புயல்களின்போது மனித உயிரிழப்பு மற்றும் கால்நடை சேதம் பெருமளவில் தவிர்க்கப்பட்டு உள்ளது. எனினும், நிவர் மற்றும் புரெவி புயல்கள் கரையை கடக்கும்போது வீசிய பலத்த காற்று மற்றும் கனமழையின் காரணமாக, மாநிலத்தின் பல பகுதிகளில் மின்சாரம், சாலை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு சொந்தமான பல உட்கட்டமைப்புகளுக்கு பெரும்சேதம் ஏற்பட்டது.

இதுவன்றி, வேளாண் மற்றும் தோட்டக்கலை பயிர்களுக்கும் பெருமளவில் சேதம் ஏற்பட்டு உள்ளது. எனது அறிவுரையின் பேரில் மேற்கொள்ளப்பட்ட மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளின் காரணமாக புயல் பாதிப்பிற்கு உள்ளான மாவட்டங்களில் இயல்பு நிலை உடனடியாக திரும்பியது. இப்புயலினால் ஏற்பட்ட பயிர் சேதத்தை உடனடியாக கணக்கீடு செய்யுமாறு வருவாய்த்துறை, வேளாண்மைத்துறை மற்றும் தோட்டக்கலை துறை அலுவலர்களுக்கு நான் உத்தரவிட்டிருந்தேன்.

8-12-2020 மற்றும் 9-12- 2020 ஆகிய நாட்களில் நிவர் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய குழு ஆய்வு செய்ததுபோல், புரெவி புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய குழு 28-12-2020 முதல் 30-12-2020 வரை ஆய்வு செய்தது. நிவர் புயலின் காரணமாக ஏற்பட்ட சேதங்களை தற்காலிகமாக சீரமைக்க ரூ.641.83 கோடியும், நிரந்தரமாக சீரமைக்க ரூ.3,108.55 கோடியும் ஆக மொத்தம் ரூ.3,750.38 கோடி தேவைப்படும் என மத்திய அரசுக்கு தெரிவிக்கப்பட்டு, மத்திய அரசின் நிதி உதவி கோரப்பட்டுள்ளது.

மேலும், புரெவி புயலின் காரணமாக ஏற்பட்ட சேதங்களை தற்காலிகமாக சீரமைக்க ரூ.485 கோடியும், நிரந்தரமாக சீரமைக்க ரூ.1,029 கோடியும், ஆக மொத்தம் ரூ.1,514 கோடி தேவைப்படும் என தெரிவித்து மத்திய அரசின் நிதி உதவி கோரப்பட்டுள்ளது.

தமிழக விவசாயிகளின் மீது எப்பொழுதும் மிகுந்த அக்கறை கொண்ட நான், நிவர் மற்றும் புரெவி புயல்களின் தாக்கத்தின் காரணமாக பாதிப்பிற்கு உள்ளான விவசாயிகளின் நலனை காக்கும் பொருட்டும், வேளாண் பெருமக்கள் அதிக உற்பத்தி செலவு செய்து, பேரிடரால் பெரும்பாதிப்பு அடைந்துள்ளதை கருத்தில் கொண்டும், தேசிய பேரிடர் நிவாரண நிதியின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி, மானாவரி மற்றும் நீர்ப்பாசன வசதி பெற்ற நெற்பயிர்களுக்கும், நீர்ப்பாசன வசதி பெற்ற இதர பயிர்களுக்கும் ஹெக்டேர் ஒன்றுக்கு வழங்கப்படும் இடுபொருள் நிவாரணத் தொகையான ரூ.13,500 என்பதை ரூ.20 ஆயிரமாக உயர்த்தியும், மானாவாரி நெற்பயிர் தவிர, அனைத்து மானாவாரி பயிர்களுக்கும் இடுபொருள் நிவாரணத்தொகையான ஹெக்டேர் ஒன்றுக்கு வழங்கப்படும் ரூ.7,410 என்பதை ரூ.10 ஆயிரமாக உயர்த்தியும், பல்லாண்டு கால பயிர்களுக்கு இடுபொருள் நிவாரணத்தொகையாக ஹெக்டேர் ஒன்றுக்கு வழங்கப்படும் ரூ.18 ஆயிரம் என்பதை ரூ.25 ஆயிரமாக உயர்த்தியும் வழங்க நான் ஆணையிட்டுள்ளேன்.

உயர்த்தப்பட்ட இடுபொருள் நிவாரணத்திற்கான தொகையை, தமிழ்நாடு அரசு வழங்கும். மேலும், தேசிய பேரிடர் நிவாரண வழிகாட்டு நெறிமுறைகளின்படி, பாதிப்படைந்த விவசாயிகளுக்கு அதிகபட்சமாக 2 ஹெக்டேர் என்ற அளவில் மட்டுமே இடுபொருள் நிவாரணம் வழங்க வழிவகை உள்ளது. இந்த பேரிடரில், அனைத்து விவசாயிகளும் தங்களது வாழ்வாதாரத்தை இழந்துள்ள காரணத்தால் 2 ஹெக்டேர் என்ற உச்சவரம்பை தளர்த்தி, பாதிக்கப்பட்ட பரப்பளவு முழுவதற்கும் உச்சவரம்பின்றி இடுபொருள் நிவாரணம் வழங்கவும் நான் ஆணையிட்டுள்ளேன்.

இதனைத் தொடர்ந்து நிவர் மற்றும் புரெவி புயல்களின் காரணமாக, பாதிப்பிற்குள்ளான 3,10,589.63 ஹெக்டேர் பரப்பளவிலான வேளாண் மற்றும் தோட்டக்கலைப் பயிர்களுக்கு, சுமார் 5 லட்சம் விவசாய பெருமக்களுக்கு ரூ.600 கோடி இடுபொருள் நிவாரணமாக வழங்கப்படும். இந்நிவாரணம் விவசாயிகளின் வங்கி கணக்குகளில் 7-1-2021 முதல் நேரடியாக வரவு வைக்கப்படும் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்