தமிழக செய்திகள்

ரூ.76½ லட்சம் மோசடி வழக்கு: முன்னாள் அமைச்சர் கோர்ட்டில் சரண்

சத்துணவு அமைப்பாளர் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.76½ லட்சம் மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் ராசிபுரம் குற்றவியல் கோர்ட்டில் முன்னாள் அமைச்சர் டாக்டர் சரோஜா சரண் அடைந்தார்.

தினத்தந்தி

நாமக்கல்,

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் சட்டசபை தொகுதி அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ.வும், முன்னாள் சமூகநலன் மற்றும் சத்துணவு திட்டத்துறை அமைச்சராகவும் இருந்தவர் டாக்டர் சரோஜா. இவருடைய கணவர் டாக்டர் லோகரஞ்சன்.

முன்னாள் அமைச்சர் சரோஜா, அவருடைய கணவர் லோகரஞ்சன் ஆகியோர் சத்துணவு அமைப்பாளர் வேலை வாங்கி தருவதாக கூறி 15 பேரிடம் ரூ.76 லட்சத்து 50 ஆயிரம் பெற்று கொண்டு வேலை வாங்கி தராமல் ஏமாற்றி விட்டதாக அவர்களது நெருங்கிய உறவினர் குணசீலன் என்பவர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார்.

ஐகோர்ட்டு உத்தரவு

இதையடுத்து சரோஜா மற்றும் கணவர் லோகரஞ்சன் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் தங்களுக்கு ஜாமீன் வழங்க கோரி சென்னை ஐகோர்ட்டில் சரோஜா தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

பின்னர் சென்னை ஐகோர்ட்டு சரோஜா மற்றும் லோகரஞ்சன் ஆகிய இருவரும் தலா ரூ.12 லட்சம் வீதம் மொத்தம் ரூ.25 லட்சத்தை கீழமை கோர்ட்டில் டெபாசிட் செய்ய வேண்டும் என்றும், ஒவ்வொருவருக்கும் தலா 2 பேர் ரூ.25 ஆயிரம் வீதம் தனி நபர் ஜாமீன் வழங்க வேண்டும் என்றும், வாரந்தோறும் சனிக்கிழமை நாமக்கல்லில் உள்ள மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் அலுவலகத்தில் இருவரும் மறுஉத்தரவு வரும்வரை கையெழுத்திட வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

சரண் அடைந்தனர்

இந்த நிலையில், நேற்று காலை சரோஜா, கணவர் லோகரஞ்சன் ஆகியோர் ராசிபுரம் குற்றவியல் கோர்ட்டில் நீதிபதி ரெஹனா பேகம் முன்னிலையில் சரண் அடைந்தனர். மேலும் அவர்கள் ஐகோர்ட்டு உத்தரவின்படி ரூ.25 லட்சம் டெபாசிட் செய்தனர். இதனால் இவர்கள் இருவருக்கும் நீதிபதிகள் ஜாமீன் வழங்கினர்.

இதையடுத்து சரோஜாவும், அவரது கணவர் லோகரஞ்சனும் கோர்ட்டில் கையெழுத்து போட்டுவிட்டு வெளியே வந்தனர். அப்போது நூற்றுக்கணக்கான அ.தி.மு.க.வினர் கோர்ட்டு அருகே திரண்டனர். மேலும் அ.தி.மு.க.வை சேர்ந்த வக்கீல்களும் வந்திருந்தனர்.

உறவினர் இறப்பு

முன்னாள் அமைச்சர் சரோஜா மீது புகார் கூறிய அவருடைய உறவினர் குணசீலன் 3 மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு