சென்னை,
திருவள்ளூர் மாவட்டம் செம்பரப்பாக்கம் பேருந்து நிலையம் பகுதியில், சில நாட்களுக்கு முன்னர் 29 வயது பெண் ஒருவர் ஆட்டோவில் மூன்று நபர்களால் கடத்திச் செல்லப்பட்டார். வழக்கமாக அப்பகுதி வழியாக செல்லும் ஆட்டோ என்பதால் அந்த பெண் அதில் ஏறியுள்ளார்.
ஆனால் சிறிது நேரத்தில் ஆட்டோ ஓட்டுனர் வேறு வழியில் செல்ல ஆரம்பித்ததால் சந்தேகமடைந்த அந்த பெண் ஆட்டோவை நிறுத்துமாறு கூறிய போது ஆட்டோவில் இருந்த நபர்கள் அப்பெண்ணை மிரட்டியுள்ளனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த அவர் தன்னை காப்பாற்றுமாறு கத்தி கூச்சலிட்டுள்ளார். அப்போது அவ்வழியாக இரு சக்கர வாகனத்தில் சென்ற 5 இளைஞர்கள் ஷேர் ஆட்டோவை துரத்தியுள்ளனர். சிறிது தூரம் சென்றதும் ஆட்டோவில் இருந்து குதித்து அப்பெண் தப்பித்துள்ளார்.
அந்த ஆட்டோ ஓட்டுனரை மடக்கிப் பிடிப்பதற்காக, இரண்டு பேர் ஆட்டோவின் முன்பாக சென்று வழிமறித்துள்ளனர். அப்போது ஆட்டோ மோதியதில் இரு சக்கர வாகனத்தில் சென்ற யாகேஷ் என்ற இளைஞர் படுகாயமடைந்தார்.
பின்னர் ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஆட்டோ ஓட்டுநர் உள்ளிட்ட 3 பேரும் தப்பித்த நிலையில் போலீசார், கடத்தல் மற்றும் கொலை வழக்குகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
இந்நிலையில் தமிழக சட்டப்பேரவையில் இந்த சம்பவம் குறித்து பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெண்ணை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்ட இளைஞர்களுக்கு பாராட்டு தெரிவித்தார். கடத்தப்பட்ட பெண்ணை காப்பாற்ற முயன்ற போது விபத்துக்குள்ளாகி உயிரிழந்த யாகேஷின் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவித்தார்.
இந்த சம்பவத்தில் காயமடைந்த ஃபிராங்க்ளின் என்பவருக்கு 2 லட்சம் ரூபாயும், மேலும் 3 இளைஞர்களுக்கு தலா 25 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.