மதுரை,
கீழடி அகழாய்வு பணிகள் தொடரும் என்று ஆய்வுக்கு பின் மத்திய மந்திரிகள் மகேஷ் சர்மா, நிர்மலா சீதாராமன் ஆகியோர் கூறினர்.
கீழடியில் ஆய்வு
மத்திய கலாசார மற்றும் சுற்றுலாத்துறை இணை மந்திரி மகேஷ் சர்மா, வர்த்தக மற்றும் தொழில் துறை இணை மந்திரி நிர்மலா சீதாராமன், பா.ஜனதா கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர் நேற்று மதுரை அருகே உள்ள கீழடிக்கு வந்தனர். அவர்கள் அங்கு ஏற்கனவே நடந்த அகழாய்வு பணிகளை பார்வையிட்டனர்.
பின்னர் மத்திய மந்திரி மகேஷ் சர்மா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அனைவருக்கும் சித்திரை மாத நல்வாழ்த்துக்கள். நான் மட்டுமல்ல, பிரதமர் மோடியும் தமிழ் மொழி மீது தீராத பற்றுக்கொண்டவர். ஒரு விஷயத்தை உங்களிடம் தெளிவாக எடுத்துக் கூற விரும்புகிறேன். தொல்லியல் துறையால் மேற்கொள்ளப்படும் அனைத்து அகழாய்வு பணிகளும் 5 ஆண்டுகள் நிச்சயம் நடைபெறும். நான் அமைச்சராக இருக்கும் போது தொடங்கப்பட்ட அகழாய்வு பணிகள், நான் அமைச்சராக இல்லாவிட்டாலும் இந்த பணியினை தொல்லியல் துறை தொடர்ந்து மேற்கொள்ளும்.
இடமாற்றம்
கீழடி அகழாய்வு பணியினை பொறுத்தவரை 5 ஆண்டுகளில், இது வரை 2 ஆண்டுகள் முடிந்துள்ளது. மீதமுள்ள 3 ஆண்டுகள் நிச்சயம் நடைபெறும். 3-ம் ஆண்டு பணிக்காக ரூ.40 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதே போல் இங்கு எடுக்கும் பொருட்களை, இந்த இடத்திலேயே பொதுமக்களின் பார்வைக்கு வைப்போம். தேவைப்பட்டால் சிவகங்கை மியூசியத்தில் அல்லது சென்னையில் தான் வைப்போம். வேறு எங்கும் கொண்டு போக மாட்டோம். தேவைப்பட்டால் கீழடியில் மியூசியம் அமைப்போம்.
தொல்லியல் துறையை பொறுத்தவரை ஒரு அதிகாரி, ஒரு இடத்தில் 3 ஆண்டுகள் மட்டுமே பணிபுரிய வேண்டும். அந்த அடிப்படையில் தான் இங்கு பணியாற்றிய அமர்நாத் ராமகிருஷ்ணன் இடமாற்றம் செய்யப்பட்டார். வேறு எந்த காரணமும் கிடையாது.
முழு ஒத்துழைப்பு
கீழடியில் தற்போது பணி அமர்த்தப்பட்டுள்ள, ஸ்ரீராமன் தமிழகத்தை சேர்ந்தவர் தான். அவர் மிக சிறப்பாக பணியாற்றி வருபவர். அவர் இந்த அகழாய்வு பணியினை மிகச்சிறப்பாக மேற்கொள்வார். நான் வைக்கும் கோரிக்கை என்னவென்றால், அகழாய்வு பணிகள் நடக்க இங்குள்ள நில உரிமையாளர்களின் ஒத்துழைப்பு மிக அவசியம். ஏற்கனவே அவர்கள் அளித்த ஒத்துழைப்பால் தான் இந்த பணி மிக சிறப்பாக நடந்துள்ளது. தொடர்ந்து இந்த அகழாய்வு பணி சிறப்பாக நடக்க அவர்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதைத்தொடர்ந்து மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் நிருபர்களிடம் கூறியதாவது:-
கீழடி அகழாய்வு பணிகள் தொடர்ந்து நடைபெறும் என்று மந்திரி அறிவித்துள்ளார். அவர் சொன்னது போல் இந்த அகழாய்வு பணி சிறப்பாக நடக்கும். தொல்லியல் துறையில் 26 அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதில் அமர்நாத் ராமகிருஷ்ணனும் ஒருவர். எனவே அதில் அரசியல் சாயம் பூசுவது எல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாது.
நிதி ஒதுக்கீடு
நாட்டில் நடக்கும் ஒவ்வொரு அகழாய்வு பணிக்கும், தொல்லியல் துறையின் நிலைக்குழு தான் நிதி ஒதுக்கீடு செய்யும். அதே போல் கீழடி அகழாய்வு பணிக்கும், அந்த நிலைக்குழு தான் நிதி வழங்கும். ஆனால் கீழடி அகழாய்வு பணிகளின் அறிக்கை வழங்காததால், அந்த நிலைக்குழு நிதி ஒதுக்கீடு செய்ய வில்லை. தற்போது அறிக்கை வழங்கப்பட்டுள்ளதால், நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த அறிக்கை வழங்குவதற்கு ஏன் தாமதம் ஆனது என்பதற்கு நீங்கள் அமர்நாத் ராமகிருஷ்ணனிடம் தான் கேட்க வேண்டும்.
இந்த அகழாய்வு பணிகளை, மத்திய அரசு தடுத்து நிறுத்த முயல்கிறது என்று கூறுவது எல்லாம், அப்பட்டமான கற்பனை. நாங்கள், மந்திரி மகேஷ் சர்மாவிடம் நீங்கள் கீழடிக்கு வந்து அகழாய்வு பணிகளை பார்வையிட வேண்டும் என்று கடந்த சில மாதங்களுக்கு முன்பு கேட்டு இருந்தோம். அவர் உத்தரபிரதேச தேர்தல் முடிந்தவுடன் வருவதாக கூறி இருந்தார். அதன்படி தற்போது இங்கு வந்துள்ளார். இந்த கீழடி அகழாய்வு பணிகள் சிறப்பாக நடக்க வேண்டும் என்பது தான் தமிழக பா.ஜனதா மற்றும் மத்திய அரசின் நிலைப்பாடு ஆகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நில உரிமையாளர்கள் கோரிக்கை
இதைத்தொடர்ந்து அங்குள்ள சில நில உரிமையாளர்கள், மந்திரி மகேஷ் சர்மாவை சந்தித்து பேசினர். அப்போது அவர்கள், இங்குள்ள நில உரிமையாளர்கள் அனைவரும் இங்குள்ள தென்னை மரங்களை நம்பி தான் வாழ்கிறோம். அகழாய்வு பணியின் போது மணல் தோண்டப்படுவதாலும், அருகில் இதனை கொட்டுவதாலும் எங்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. சாலை போடுவதற்கு நிலத்தை அரசு வாங்குவது போல, இங்குள்ள எங்கள் நிலத்தையும் அரசு வாங்கிக் கொள்ள வேண்டும். அரசுக்கு இடம் கொடுக்க நாங்கள் தயாராக இருக்கிறோம் என்றனர்.
அதற்கு பதிலளித்த மந்திரி சர்மா, இந்த இடம் உங்களுடையது. இங்கு அரசு சார்பாக அகழாய்வு பணிகள் நடக்கின்றன. இந்த பணியால் ஏற்படும் பாதிப்புகளுக்கு அரசு நிச்சயம் உங்களுக்கு இழப்பீடு தொகை வழங்கும். நிலத்தை வாங்க வேண்டும் என்று அரசிடம் திட்டம் எதுவும் கிடையாது. அதற்கு அரசு முயலவும் செய்யாது. நீங்களாகவே இடத்தை கொடுக்க விரும்பினால், அதனை அரசு பரிசீலிணை செய்து தான் முடிவு எடுக்கும் என்றார்.