வல்லம்;
வல்லத்தில், நூதன முறையில் வங்கி வாசலில் வைத்து விவசாயியிடம் ரூ. 5 லட்சத்தை கொள்ளையடித்துச்சென்ற மர்ம மனிதனை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
விவசாயி
தஞ்சையை அடுத்த வல்லம் நடுத்தெருவை சேர்ந்தவர் அமலநாதன் (வயது 62). விவசாயியான இவருக்கு வல்லம்-சென்னம்பட்டி சாலையில் தோப்பு உள்ளது. அங்கு இவர் தைல மரம் வளர்த்து வந்தார்.இந்த மரங்களை வெட்டி தமிழ்நாடு காகித ஆலைக்கு அமலநாதன் அனுப்பி வைத்து வந்தார். கடந்த மாதம் தனது தோப்பில் இருந்த தைல மரங்களை வெட்டி தமிழ்நாடு காகித ஆலைக்கு அவர் அனுப்பி வைத்தார்.
ரூ.5 லட்சத்தை எடுத்து வந்தார்
இதற்கான தொகை ரூ.5 லட்சம் அவரது வங்கி கணக்கில் காகித ஆலை சார்பில் வரவு வைக்கப்பட்டது. இதை அறிந்த அமலநாதன் நேற்று காலை பணத்தை எடுப்பதற்காக வல்லம் பஸ் நிலையம் அருகே உள்ள தேசிய மயமாக்கப்பட்ட ஒரு வங்கிக்கு தனது சைக்கிளில் சென்றார்.சைக்கிளை வங்கி வாசலில் நிறுத்தி வைத்து விட்டு அவர் வங்கியின் உள்ளே சென்றார். வங்கியில் இருந்து ரூ.5 லட்சத்தை ஒரு பையில் வைத்து எடுத்துக் கொண்டு வங்கியில் இருந்து வெளியே வந்தார். பின்னர் பணப்பையை தனது சைக்கிளில் மாட்டினார்.
நூதன முறையில் கொள்ளை
அப்போது அவரது அருகில் வந்த மர்ம மனிதன் ஒருவன், கீழே 100 ரூபாய் நோட்டை போட்டுவிட்டு அமலநாதனை அழைத்து கீழே பணம் கிடப்பதாக கூறி பணம் உங்களுடையதா? என கேட்டு உள்ளார்.அதைக்கேட்ட அமலநாதன், தான் வைத்திருந்த பணம் கீழே விழுந்து இருக்கலாம் என்று எண்ணி கீழே குனிந்து அந்த பணத்தை எடுக்க முயன்று உள்ளார். அந்த நேரத்தை பயன்படுத்திக்கொண்ட அந்த மர்ம மனிதன் கண் இமைக்கும் நேரத்தில் சைக்கிளில் மாட்டியிருந்த ரூ.5 லட்சம் பணப்பையை எடுத்துக்கொண்டு அங்கிருந்து வேகமாக தப்பிச் சென்று விட்டான்.
போலீசில் புகார்
கீழே குனிந்து விட்டு நிமிர்ந்து பார்த்த அமலநாதன் தனது சைக்கிளில் மாட்டியிருந்த பணப்பை காணாமல் போனதை அறிந்து கடும் அதிர்ச்சி அடைந்தார். அப்போதுதான் அந்த மர்ம மனிதன் தன்னை ஏமாற்றி தனது பணத்தை கொள்ளையடித்துச்சென்றது அமலநாதனுக்கு தெரிய வந்தது.அப்போது வங்கி வாசலில் நின்று கொண்டிருந்தவர்களிடம் நடந்த சம்பவத்தை கூறி அவர் கதறி அழுதார். உடனே அங்கிருந்தவர்கள் பணத்தை கொள்ளையடித்துச்சென்ற மர்ம மனிதனை தேடிப்பார்த்தனர். ஆனால் மர்ம மனிதன் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டது தெரிய வந்தது. இந்த நூதன கொள்ளை சம்பவம் குறித்து அமலநாதன் வல்லம் போலீசில் புகார் செய்தார்.
வலைவீச்சு
தகவல் அறிந்த வல்லம் துணை போலீஸ் சூப்பிரண்டு பிருந்தா, இன்ஸ்பெக்டர் கலைவாணி, சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மற்றும் போலீசார் வங்கிக்கு நேரில் வந்து கொள்ளை சம்பவம் நடந்த இடத்தை பார்வையிட்டனர். பின்னர் அங்கிருந்தவர்களிடமும், வங்கி உள்ளே சென்றும் நடந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர்.மேலும் வங்கியின் உள்புறம், நுழைவு வாயில் மற்றும் சுற்றியுள்ள பகுதியில் வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ள காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருவதுடன் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம மனிதனை வலைவீசி தேடி வருகின்றனர்.வல்லத்தில், நூதன முறையில் பட்டப்பகலில் விவசாயியிடம் ரூ.5 லட்சம் கொள்ளையடித்துச்சென்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.