தமிழக செய்திகள்

சேலம்: கார்- லாரி மோதி பயங்கர விபத்து; 2 பேர் பலி, 3 பேர் படுகாயம்

தொப்பூர்- மேச்சேரி சாலையில் தெத்திகிரிப்பட்டி அருகில் கார் சென்ற போது விபத்து ஏற்பட்டுள்ளது.

சேலம்,

சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே குதிரைக்காரன்புதூர் கூலிவளவு பகுதியை சேர்ந்தவர் பரமசிவம், இவருடைய மனைவி ராஜேஸ்வரி உறவினர் சந்தானம். இவர்கள் 3 பேரும் ஆரணியில் உள்ள ஒரு கோவிலின் மண்டல பூஜைக்கு சென்றுவர முடிவு செய்தனர். அதற்காக மேச்சேரி பகுதியில் இருந்து கோவில் பூசாரிகள் செந்தில்குமார் (48), நவீன் (26) ஆகிய 2 பேரை அழைத்தனர். அவர்களும் சரி என்று கூறினர். இவர்கள் 5 பேரும் ஆரணியில் உள்ள ஒரு கோவிலுக்கு சென்றனர். அங்கு மண்டல பூஜையை முடித்து விட்டு காரில் சொந்த ஊருக்கு வந்து கொண்டிருந்தனர். காரை செந்தில்குமார் ஓட்டி வந்தார்.

தொப்பூர்- மேச்சேரி சாலையில் தெத்திகிரிப்பட்டி அருகில் காலை 11 மணி அளவில் கார் வந்தது. அப்போது ஆந்திராவுக்கு மீன் ஏற்றுவதற்காக சென்ற லாரியும், காரும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக்கொண்டன. இந்த விபத்தில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. காரை ஓட்டி வந்த செந்தில்குமார், நவீன் ஆகிய 2 பேர் சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி பலியானார்கள். மற்ற 3 பேரும் படுகாயங்களுடன் அபயகுரல் எழுப்பினர்.

கார் மீது மோதிய லாரி நிலைதடுமாறி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. லாரியை ஓட்டிவந்த கூனாண்டியூரை சேர்ந்த டிரைவர் பூவரசன் படுகாயம் அடைந்தார். விபத்தை கண்டதும் அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் காயம் அடைந்த 4 பேரையும் மீட்டு போலீசார் உதவியுடன் சேலத்தில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

விபத்து குறித்து தகவல் அறிந்த மேட்டூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சண்முகசுந்தரம், மேச்சேரி இன்ஸ்பெக்டர் மகேந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் சுதாகர் ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டனர். விபத்தில் பலியானவர்களது உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓமலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து மேச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த விபத்து அந்த பகுதியில் பெருத்த சோகத்தை ஏற்படுத்தியது.