தா.பழூர்:
அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே உள்ள தென்கச்சி பெருமாள் நத்தம் கிராம நிர்வாக அலுவலர் அசோக்குமார், தனது உதவியாளருடன் கொள்ளிடக்கரை வழியாக சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மாட்டு வண்டியில் ஒருவர் மணல் ஏற்றி வந்தார். அந்த மாட்டு வண்டியை நிறுத்தி, அதில் வந்தவரிடம் அவர் விசாரித்தார். அப்போது மணல் ஏற்றி வந்தவர் தென்கச்சிபெருமாள்நத்தம் காலனி தெருவை சேர்ந்த சின்னத்தம்பியின் மகன் ராஜேஷ் (வயது 32) என்பது தெரியவந்தது. மேலும் அவர், அனுமதியின்றி மாட்டு வண்டியில் மணல் ஏற்றி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து மாட்டு வண்டியை மணலுடன் பறிமுதல் செய்த கிராம நிர்வாக அலுவலர் அசோக்குமார், இது குறித்து தா.பழூர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜா வழக்குப்பதிவு செய்து, ராஜேஷை கைது செய்தார்.