தமிழக செய்திகள்

தூய்மை பணியாளர் விபத்தில் பலி

வத்தலக்குண்டு அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதியதில் தூய்மை பணியாளர் பரிதாபமாக இறந்தார். அவருடைய உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே உள்ள வெங்கடாஸ்திரிகோட்டையை சேர்ந்தவர் மாரியப்பன். அவருடைய மகன் மணிவேல் (வயது 24). இவர், வத்தலக்குண்டு பேரூராட்சியில் தூய்மை பணியாளராக பணியாற்றி வந்தார்.

நேற்று முன்தினம் இவர், வத்தலக்குண்டு அருகே நாகலாபுரத்தை சேர்ந்த உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சியில் பங்கேற்றார். பின்னர் நாகலாபுரம் பிரிவு அருகே, வத்தலக்குண்டு-மதுரை சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.

அப்போது எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள், எதிர்பாராதவிதமாக மணிவேல் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த மணிவேலை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக வத்தலக்குண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

உறவினர்கள் மறியல்

இதேபோல் மற்றொரு மோட்டார் சைக்கிளில் மனைவி குழந்தையோடு வந்த நாகலாபுரம் பகுதியை சேர்ந்த சேக் உதுமான் (36) படுகாயமடைந்து சிகிச்சைக்காக திண்டுக்கல்லில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அவரது மனைவி, குழந்தகைகு லேசான காயம் ஏற்பட்டது.

இந்த நிலையில் மணிவேலின் உறவினர்கள் திரண்டு வந்து, வத்தலக்குண்டு போலீஸ் நிலையம் அருகே சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான போலீசார் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது விபத்துக்கு காரணமானவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதியளித்தனர். இதையடுத்து மணிவேலின் உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். விபத்தில் பலியான மணிவேலுவுக்கு அன்னகாமு என்ற மனைவியும், 1 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.