தமிழக செய்திகள்

தமிழகத்தில் பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும் சரத்குமார் பேட்டி

தமிழகத்தில் பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும் என்று சரத்குமார் கூறினார்.

சென்னை,

தமிழகத்தில் பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும் என்று சரத்குமார் கூறினார்.

அரசின் செயல்பாடு

முதல்அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் நேற்று தலைமை செயலகத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்தார். பின்னர் சரத்குமார் அளித்த பேட்டி வருமாறு:

ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தமிழக அரசின் செயல்பாடு சிறப்பாக இருந்தது. முதல்அமைச்சர் டெல்லி சென்று பிரதமரை சந்தித்துவிட்டு வந்தார். அவசர சட்டத்தை பிரகடனம் செய்வதற்கு முழுமுயற்சி எடுத்து நிறைவேற்றி இருக்கிறார். அந்த வகையில் முதல்அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சிறப்பாக செயல்பட்டார்.

இதற்காக போராட்டம் நடத்திய மாணவர்களுக்கு பாராட்டுகள். இதற்கு அரசியல் தலைவர்கள், ஆர்வலர்கள் என பலரும் போராடி வந்தனர். எப்படி என்றாலும் மாணவர்களின் ஒற்றுமை, வீரியம், ஒருமைப்பாடு அனைத்தும் அவர்களின் போராட்டத்துக்கு வலிமை சேர்த்து மிகப்பெரிய வெற்றியை அவர்களுக்கு தேடித்தந்துள்ளது. இதுபற்றி அவர்களுக்கு பலமுறை வாழ்த்தும், நன்றியும் தெரிவித்து இருக்கிறேன்.

அமெரிக்க அமைப்பு பீட்டா

அமெரிக்காவில் நடைபெறும் ரோடியோ நிகழ்ச்சியில், காளை மீது ஒருவர் எவ்வளவு நேரம் உட்காருகிறாரோ அவர் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார். இதில் காளையும் கீழே விழும் வாய்ப்பு உள்ளது. ஆனால் அதை பீட்டாவினால் தடுக்க முடியவில்லை.

அமெரிக்காவில் உருவான பீட்டா மீது அங்குள்ள வெர்ஜீனியா மாகாணத்தில் கூறப்படும் மிகப்பெரிய குற்றச்சாட்டு, ஆதரவற்ற நாய், பூனை போன்ற மிருகங்களை தத்தெடுப்பார்கள். 15 நாட்களுக்கு மேல் அதை யாரும் வாங்காமல் இருந்தால் அவற்றை கொல்லும் சூழ்நிலை அங்குள்ளது.

தடை செய்ய வேண்டும்

இங்கு பீட்டாவின் நோக்கம் என்னவென்று புரியவில்லை. அதன் நோக்கத்தை ஆராய்ந்து தமிழகத்தில் அதை நிச்சயமாக தடை செய்ய வேண்டும். அதில் எந்த வித மாற்றுக்கருத்தும் இல்லை. இங்கு விலங்குகள் நலவாரியம் ஏற்கனவே உள்ளது. அப்படி இருக்கும்போது அமெரிக்காவில் உருவான ஒரு நிறுவனம் ஏன் இங்கு வந்து செயல்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.