இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்குவது எப்போது? என்பது குறித்து அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பதில் அளித்தார்.
பள்ளி கட்டிடம் திறப்பு
மதுரை மாநகராட்சி அவ்வை பள்ளியில் ரூ.25 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள கூடுதல் கட்டிட திறப்பு விழா நேற்று நடந்தது. மாநகராட்சி கமிஷனர் சிம்ரன்ஜீத்சிங் காலொன் தலைமை தாங்கினார். கலெக்டர் அனிஷ் சேகர் முன்னிலை வகித்தார். மேயர் இந்திராணி, துணை மேயர் நாகராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், கட்டிடத்தை திறந்து வைத்தார். அதனைத்தொடர்ந்து அவர், சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் பொதுமக்களிடம் குறைகள் கேட்டார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
உத்வேகம் கிடைக்கும்
கடந்த சில மாதங்களுக்கு முன்பு அரசு மற்றும் புதிய தொழில் நிறுவனங்கள் இணைந்து நடத்திய கண்காட்சியை கண்டேன். அந்த கண்காட்சியில் பல நவீன பொருட்கள் காட்சிக்காக வைக்கப்பட்டு இருந்தன. டிரோன் மூலம் நிலத்தை சர்வே செய்வது, தானியங்கி சமையல் எந்திரம், கழிவு நீரை அகற்றும் ரோபோட்டுகள் வைக்கப்பட்டு இருந்தன.
எனவே புதிய தொழில் தொடங்கும் நிறுவனங்களில் இருந்து தமிழக அரசு இது போன்ற பொருட்களை கொள்முதல் செய்ய முடிவு செய்தது. அதற்கு முதல்-அமைச்சரும் அனுமதி அளித்தார். புதிய நிறுவனங்களின் இந்த பொருட்களை அரசு வாங்குவதால் அவர்களுக்கு ஒரு உத்வேகம் கிடைக்கும். இது பொருளதார வளர்ச்சியை ஊக்கப்படுத்தும்.
புதிய நிறுவனங்களின் வசதிக்காக டெண்டர் விதிமுறைகள் மாற்றப்படும். அதற்கு முன்னுதாரணமாக சமூக நலத்துறை சார்பாக புதிய நிறுவனங்கள் பங்கேற்கும் வகையில் டெண்டர் விடப்பட்டது. அதில் 133 புதிய நிறுவனங்கள் விண்ணப்பம் செய்து இருந்தார்கள். அதில் 25 நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.
இல்லம் தேடி சேவை
அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு சென்று இருந்தேன். அதில் அமெரிக்காவிற்கு சென்றதது எனது துறையில் சில மாற்றம் செய்வதற்குதான். அங்குள்ள பல நிறுவனங்களை சந்தித்து தமிழகத்தில் முதலீடு செய்வதற்கும் பேச்சுவார்த்தை நடத்தினேன். ஆஸ்திரேலியாவுக்கு விருந்தினராக என்னை அழைத்து இருந்தார்கள். அங்கு நான் ஆன்லைன் மூலம் மக்களுக்கு வழங்கும் பல சேவைகளை பற்றி தெரிந்து கொண்டேன்.
அங்குள்ள தேசிய மற்றும் மாநில அமைச்சர்களை சந்தித்து பேசினேன். மக்களுக்கான அனைத்து சேவைகளையும் ஆன்லைன் மூலம் வழங்க வேண்டும் என்பதுதான் தமிழக அரசின் இலக்கு. ஆன்லைன் மூலம் சேவை பெற முடியாதவர்களுக்கு அவர்கள் இல்லம் தேடி சேவை செய்ய வேண்டும்.
மாதந்தாறும் ரூ.1000
இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 உரிமை தொகையை வழங்குவதை எவ்வளவு சீக்கிரம், கொடுக்க முடியுமா அவ்வளவு சீக்கிரம் கொடுப்பதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருக்கிறார். அதற்காக விரிவான பணி நடந்து கொண்டு இருக்கிறது. உறுதியாக ஒன்று மட்டும் சொல்கிறேன். அனைத்திற்கும் 'டேட்டா'தான் முக்கியம். மொத்தம் எத்தனை பேர் இருக்கிறார்கள், அவர்கள் எந்த சூழ்நிலையில் இருக்கிறார்கள்? என பார்க்க வேண்டும்.
எனவே டேட்டாவை தெளிவுப்படுத்தி, சுத்தப்படுத்துவதுதான் அதில் முதல் பணியாக கருதுகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.