சென்னை,
கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. இதையடுத்து ஆன்லைனில் மாணவர்களுக்கு பாடம் நடத்தப்பட்டு வந்த நிலையில், சுமார் 10 மாதங்களுக்குப் பிறகு 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் தொடங்கப்பட்டன.
அதனை தொடர்ந்து சில தினங்களில் 9 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு பாடங்கள் நடத்தப்பட்டு வந்தன. அண்மையில் நடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் 9, 10 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு குறைந்த காலத்தில் பாடங்களை நடத்தி முடிப்பதில் சிக்கல் ஏற்பட்டதன் காரணமாக அவர்கள் அனைவரும் தேர்வின்றி தேர்ச்சி பெறுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
ஆனால் காலாண்டு, அரையாண்டு தேர்வுகளும் நடைபெறாத நிலையில், 10 ஆம் வகுப்பு மாணவர்களை எந்த அடிப்படையில் 11 ஆம் வகுப்பு அல்லது தொழிற்கல்வியில் சேர்ப்பது என்ற குழப்பம் நீடித்து வந்தது. இது குறித்து இதுவரை எந்த விளக்கமும் அளிக்கப்படாத நிலையில், இன்று பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் பள்ளி அளவில் தேர்வு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
பள்ளிக்கல்வித்துறையின் உத்தரவின் அடிப்படையில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் இதுகுறித்து பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளனர். தஞ்சை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமகிருஷ்ணன் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், அனைத்து பள்ளிகளிலும் 9,10,11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் அடிப்படையில், இந்த மாத இறுதிக்குள் பள்ளி அளவில் பொதுத்தேர்வு நடத்தி முடிக்க வேண்டும், அதற்கான மதிப்பெண்களை பதிவு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.
இதே போல அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களும், பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளனர். எனவே, மாநில அளவில் பொதுத்தேர்வு நடைபெறாத போதிலும், பள்ளி அளவில் தேர்வுகள் நடத்தப்பட்டு அதன் அடிப்படையில் மாணவர்களுக்கு மதிப்பெண் பட்டியல் வழங்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.