ஈரோடு,
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலுக்கு தண்ணீர் திறக்கும் நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டார். பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்தபோது அவர் கூறியதாவது:-
நாடு முழுவதும் பிளாஸ்டிக் பைகள் தடை செய்வது குறித்து பிரதமர் மோடி தனது சுதந்திர தின உரையில் கூறி இருக்கிறார். ஆனால் கடந்த ஜனவரி 1-ந்தேதி முதலே தமிழகத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு தீவிரமாக நடந்து வருகிறது. இவ்வாறு எல்லா துறைகளிலும் அனைத்து மாநிலங்களுக்கும் மட்டுமின்றி இந்தியாவுக்கே முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது.
ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்ற கொள்கையில் அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் வழியில் தமிழக அரசு இயங்கி வருகிறது. மாணவ-மாணவிகள் சாதி, மத அடையாள கயிறுகள் கட்டி வருவதாக இன்னொரு துறையின் சார்பில் பள்ளிக்கல்வித்துறையின் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு ஒரு அறிவுறுத்தல் கடிதம் அனுப்பி உள்ளனர். இந்த கடிதம் எங்களின் அனுமதி பெற்று அனுப்பப்பட்டது அல்ல. எனவே அதுபற்றி வேறு எதுவும் கூற தேவையில்லை.
தற்போது பள்ளிக்கூடங்களில் மாணவ-மாணவிகள் எப்படி நடத்தப்படுகிறார்களோ, அந்த நிலை அப்படியே தொடரும். தமிழகத்தில் பள்ளிக்கூட மாணவர்கள் சாதி, மதத்தை அடையாளப்படுத்தும் கயிறுகள் அணிவது இல்லை. அப்படி எதேனும் இருந்தால் அது சரி செய்யப்படும். தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறை நல்ல முறையில் இயங்கி வருகிறது.
நீலகிரி மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து பள்ளிக்கூடங்களும் செயல்பட தற்காலிக ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. மேலும், முழுமையாக ஆய்வு செய்து உடனடி தீர்வு காணப்படும்.
இவ்வாறு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார். பேட்டியின்போது அமைச்சர் கே.சி.கருப்பணன் உடன் இருந்தார்.