தர்மபுரி,
தர்மபுரி அருகே உள்ள பச்சனம்பட்டியைச் சேர்ந்தவர் ராஜா (45 வயது) விவசாயி. இவரது மகள் பிரபா (15 வயது). இவர் கடகத்தூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பிரபா வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதையடுத்து மேல் சிகிச்சைக்காக அங்கிருந்து தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே பிரபா பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் பிரபாவின் உடலை வீட்டிற்கு எடுத்துச் சென்ற குடும்பத்தினர் இறுதிச் சடங்கு நடத்தி பின்னர் சுடுகாட்டில் பிரபாவின் உடலை எரித்துவிட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த கடகத்தூர் கிராம நிர்வாக அலுவலர் பாலமுரளி அங்கு சென்று விசாரணை நடத்தினார்.
அப்போது பிரபா இறந்தது தொடர்பாக போலீசாருக்கு உரிய தகவல் தெரிவிக்காமல் மாணவியின் உடல் எரிக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது. இதுதொடர்பாக அவர் தர்மபுரி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் பிரபாவின் தந்தை ராஜா மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.