தமிழக செய்திகள்

ஆன்லைன் வகுப்புகள் குறித்து பள்ளிகள், பெற்றோர் சங்கங்கள் கருத்து தெரிவிக்கலாம்; ஐகோர்ட்டு அறிவிப்பு

ஆன்லைன் வகுப்புகள் மாணவர்களின் நலன் சம்பந்தப்பட்டது என்பதால், இந்த வகுப்பு குறித்து பள்ளி நிர்வாகங்கள், பெற்றோர் ஆசிரியர் சங்கங்கள் வருகிற 19-ந்தேதி கருத்து தெரிவிக்கலாம் என்று ஐகோர்ட்டு அறிவித்து உத்தரவிட்டுள்ளது.

தினத்தந்தி

சென்னை,

கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு, ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்படுகின்றன. ஆனால் ஆன்லைன் வகுப்புகளில் தொடர்ந்து பங்கேற்கும் மாணவர்களின் விழித்திரை பாதிக்கப்படும் என்று வக்கீல் விமல்மோகன் என்பவரும், ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க இணையதளத்துக்குள் மாணவர்கள் செல்லும்போது ஆபாச விளம்பரங்கள் வந்து அவர்களது கவனத்தை சிதைப்பதாகவும், இதுகுறித்து உரிய விதிகளை வகுக்கவேண்டும் என்று சரண்யா என்பவரும் தனித்தனியாக வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.

இந்த வழக்குகளை எல்லாம் நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.ஹேமலதா ஆகியோர் விசாரித்து வருகின்றனர். ஏற்கனவே மத்திய அரசு ஆன்லைன் வகுப்பு குறித்து விதிமுறைகள் வகுத்துள்ளதாக ஐகோர்ட்டுக்கு தெரிவித்தது. இதன் அடிப்படையில் தமிழக அரசு விதிமுறைகள் வகுக்க உள்ளதா? என்று நீதிபதிகள் ஏற்கனவே கேள்வி எழுப்பியிருந்தனர்.

இந்தநிலையில் இந்த வழக்குகள் நீதிபதிகள் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு ஆன்லைன் வகுப்பு குறித்து விதிமுறைகளை வகுத்து வெளியிட்டுள்ளதாக அரசு தரப்பு வக்கீல் கூறினார். அப்போது, இந்த வழக்குகளில் தங்களையும் இணைக்க கோரி தனியார் கல்வி நிறுவனங்கள் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுவை நீதிபதிகள் ஏற்றுக்கொண்டனர். பின்னர், இந்த வழக்கு மாணவர்களின் நலன் சம்பந்தப்பட்டது. ஆன்லைன் வகுப்புகள் அனைத்து தரப்பு மாணவர்களும் கலந்து கொள்ளும் விதமாக ஒரே மாதிரியான நடைமுறையை பின்பற்ற வேண்டும். எனவே, அனைத்து பள்ளிகள், பெற்றோர் சங்கங்களின் கருத்துக்களையும் கேட்க வேண்டும் என்று கூறினர்.

மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல் ஜெ.ரவீந்திரன், இதுகுறித்து பத்திரிகைகளில் விளம்பரம் கொடுப்பதாக கூறினார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், இந்த வழக்குகளை வருகிற 19-ந்தேதிக்கு தள்ளிவைக்கிறோம். அன்று கடைசி வழக்காக இந்த வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும். அப்போது, பள்ளி நிர்வாகங்கள், பெற்றோர் ஆசிரியர் சங்கங்கள் இந்த வழக்கில் இணைந்து கருத்துக்களை தெரிவிக்கலாம். இதுகுறித்து தமிழ், ஆங்கில பத்திரிகைகளில் மனுதாரர் விளம்பரம் செய்யவேண்டும். அதேநேரம், ஆன்லைன் வகுப்புகள் குறித்து தமிழக அரசு பிறப்பித்துள்ள விதிமுறைகளை அனைத்து பள்ளிகளும் தீவிரமாக பின்பற்றவேண்டும் என்று உத்தரவிட்டனர்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்