தமிழக செய்திகள்

பழக்கடைக்காரருக்கு அரிவாள் வெட்டு

பாளையங்கோட்டையில் பழக்கடைக்காரருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

பாளையங்கோட்டை அருகே அரியகுளத்தைச் சேர்ந்தவர் முத்தையா (வயது 54). இவர் பாளையங்கோட்டை கே.டி.சி. நகர் பகுதியில் பழக்கடை நடத்தி வருகிறார். சீவலப்பேரி அருகே உள்ள தோணித்துறை பகுதி சேர்ந்த டேரன்ஸ் என்பவர் நேற்று முத்தையா பழக்கடைக்கு வந்து தர்பூசணி வாங்கி சென்றார். வீட்டிற்கு சென்று பார்த்தபோது அந்த பழம் அழுகி இருப்பது தெரிய வந்தது.

உடனே டேரன்ஸ் தனது நண்பர் மாரிராஜாவுடன் அந்த பழத்தை முத்தையா கடைக்கு கொண்டு வந்து கொடுத்துள்ளார். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த டேரன்ஸ் அரிவாளால் முத்தையாவை வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த முத்தையா பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்த பாளையங்கோட்டை தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் கனகராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.