தமிழக செய்திகள்

தேவர் ஜெயந்தி விழா பாதுகாப்பு ஏற்பாடுகள்: தமிழக டி.ஜி.பி. மகேஷ் குமார் அகர்வால் நேரில் ஆய்வு

பசும்பொன்னில் தேவர் ஜெயந்தி விழா வரும் 30-ம் தேதி நடைபெற இருப்பதை முன்னிட்டு அப்பகுதியில் 7 டி.ஐ.ஜி.க்கள், 40 எஸ்.பி.க்கள் மற்றும் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி வட்டத்தில் உள்ள பசும்பொன்னில் வரும் 30-ம் தேதி நடைபெறவுள்ள முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு காவல்துறை பாதுகாப்பு ஏற்பாடுகளை தமிழக டி.ஜி.பி. மகேஷ்குமார் அகர்வால் நேரில் ஆய்வு செய்தார்.

தேவர் ஜெயந்தி விழா பாதுகாப்பு ஏற்பாடுகள்: தமிழக டி.ஜி.பி. மகேஷ்குமார் அகர்வால் ஆய்வு

தமிழக டி.ஜி.பி.யும், காவல் படைத் தலைவருமான மகேஷ் குமார் அகர்வால், வரும் 30.10.2026 அன்று பசும்பொன்னில் நடைபெறவுள்ள தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்பு மற்றும் பந்தோபஸ்து ஏற்பாடுகளை ஆய்வு செய்வதற்காக இன்று(24.10.2026) பசும்பொன்னிற்கு நேரில் சென்றார். அங்கு விழா நடைபெறும் இடத்தைப் பார்வையிட்டு, மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடுகளை ஆய்வு செய்ததுடன், விழா ஏற்பாட்டாளர்களுடன் கலந்துரையாடி, பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் தேவையான நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.

ஆய்வுக்கூட்டம்

அதைத் தொடர்ந்து அவர், கமுதியில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், ஒட்டுமொத்த பாதுகாப்புத் திட்டம், காவல்துறையினரின் பணியமர்த்தல், போக்குவரத்து ஒழுங்குபடுத்துதல், கண்காணிப்பு நடவடிக்கைகள் மற்றும் மாவட்டங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு ஆகியவை குறித்து விரிவாக ஆய்வு மேற்கொண்டார்.

இந்த கூட்டத்தில் தமிழ்நாடு சட்டம் மற்றும் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி. அன்பு, தென் மண்டல ஐ.ஜி., மதுரை மாநகர போலீஸ் கமிஷனர், மதுரை மற்றும் ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி.க்கள் மற்றும் ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தூத்துக்குடி மற்றும் மதுரை மாவட்ட எஸ்.பி.க்கள் கலந்து கொண்டனர்.

18 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணி

தேவர் ஜெயந்தி விழா அமைதியாகவும், எவ்வித அசம்பாவிதங்களும் இன்றியும் நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில் ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களில் மொத்தம் 7 டி.ஐ.ஜி.க்கள், 40 எஸ்.பி.க்கள் மற்றும் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். பொதுமக்களின் பாதுகாப்பு, கூட்ட நெரிசல் மேலாண்மை, சட்டம் மற்றும் ஒழுங்கைப் பராமரித்தல் மற்றும் போக்குவரத்தைச் சீராக ஒழுங்குபடுத்துதல் ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளித்து விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் திட்டமிடப்பட்டுள்ளன.

118 வாகன சோதனைச் சாவடிகள்

மேலும் 118 காவல்துறை வாகனத் தணிக்கைச் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. இந்த சோதனைச் சாவடிகளில் 24 மணி நேரமும் கண்காணிக்கும் வகையில் காணொளி பதிவுக் கருவிகள் மற்றும் வாகன விவரங்களை இணையவழியில் சரிபார்க்கும் வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன.

480 கண்காணிப்பு கேமராக்கள், 460 ரோந்து வாகனங்கள்

விழா நடைபெறும் இடம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளைத் தீவிரமாகக் கண்காணிக்கும் வகையில் நவீன கண்காணிப்பு ட்ரோன்கள், 480 உயர் தெளிவுத்திறன் கொண்ட கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் நகரும் சி.சி.டி.வி. கேமராக்கள் பயன்படுத்தப்பட உள்ளன. இந்த கண்காணிப்பு அமைப்புகள் மையப்படுத்தப்பட்ட கட்டுப்பாட்டு அறை மூலம் கண்காணிக்கப்படும். மேலும் தேவைக்கேற்ப நபர்களையும், வாகனங்களையும் விரைவாக அடையாளம் காணும் வகையில் முக அடையாளம் காணும் தொழில்நுட்பம் மற்றும் வாகனப் பதிவு எண் அடையாளம் காணும் தொழில்நுட்ப வசதிகளும் பயன்படுத்தப்பட உள்ளன. பந்தோபஸ்து பணிகளுக்காக 460-க்கும் மேற்பட்ட காவல்துறை ரோந்து வாகனங்களும், விரைவு நடவடிக்கைக் குழுக்களும் (QRT) பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளன.

ஒருங்கிணைத்து பணியாற்ற அறிவுறுத்தல்

ஆய்வின்போது அனைத்து மாவட்ட காவல்துறையினரும் நெருங்கிய ஒருங்கிணைப்புடன் செயல்பட வேண்டும் என்றும், விழா ஏற்பாட்டாளர்கள் மற்றும் தொடர்புடைய அனைத்துத் தரப்பினருடனும் இணைந்து தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் தமிழக டி.ஜி.பி. அறிவுறுத்தினார். மேலும் பொதுமக்களின் ஒத்துழைப்பைப் பெறும் வகையில் கிராம அளவிலான ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி, விழா அமைதியாக நடைபெறுவதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

முறையான திட்டமிடல், போதிய காவல்துறையினர் பணியமர்த்தல், தொழில்நுட்பக் கண்காணிப்பு மற்றும் மாவட்டங்களுக்கு இடையிலான சிறந்த ஒருங்கிணைப்பு ஆகியவற்றின் மூலம் தேவர் ஜெயந்தி விழா அமைதியாகவும், பாதுகாப்பாகவும் நடைபெற அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

SCROLL FOR NEXT