நெல்லை
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதை கண்டித்து சென்னையில் நாளை(வெள்ளிக்கிழமை) ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று சீமான் கூறினார்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நெல்லையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
போலீசார் தடியடி
ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்று 6 நாட்களாக மாணவர்கள், இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் அரசு தரப்பில் முதல்அமைச்சரோ, மற்ற துறை அமைச்சர்களோ, ஆட்சியாளர்களோ பேச்சுவார்த்தை நடத்தவில்லை. அவர்களின் போராட்டத்தை கலைப்பதிலேயே குறியாக இருந்தனர்.
அதனால்தான் வன்முறையில் ஈடுபடாதவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். எத்தனை மாணவர்கள் தடியடியில் காயம் அடைந்தனர்? அவர்கள் எங்கே இருக்கிறார்கள்? என்ற விவரத்தை கூட போலீசார் தெரிவிக்கவில்லை. ஈழத்தில் போராடிய தமிழர்களை சிங்களவர்கள் அடித்தார்கள். இங்கே போராடிய தமிழர்களை போலீசார் அடிக்கிறார்கள்.
இது அரசுக்கு வலுசேர்க்கின்ற போராட்டம். இது அரசுக்கு ஆதரவான போராட்டம். இது போராட்டம் அல்ல. தமிழர் எழுச்சி புரட்சியாகும். தமிழ் இன எழுச்சி போராட்டமாகும். இதில் ஈடுபட்டவர்களை போலீசார் தாக்கியது வன்மையாக கண்டிக்கக்கூடியதாகும்.
சென்னையில் நாளை ஆர்ப்பாட்டம்
மாணவர்கள் போராட்டத்தில் அரசியல் கட்சியினர் யாரும் கலந்து கொள்ளக்கூடாது என்று கூறியவர்கள், ராகவா லாரன்ஸ், ஹிப் ஹாப் தமிழா ஆதி உள்ளிட்டவர்களை அனுமதித்தது ஏன்? இதனால்தான் பல கருத்துகள் வந்தன. போராட்டத்தில் சமூக விரோதிகள் கலந்து கொண்டதாக கூறுவது ஏற்புடையது அல்ல.
போராட்டத்தில் கலந்து கொண்ட மாணவர்கள் மீது போலீசார் நடத்திய தாக்குதலை கண்டித்து நாளை(வெள்ளிக்கிழமை) சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் நடத்திய தாக்குதலுக்கு தேர்தலில் பாடம் புகட்டுவார்கள். இவர்கள் மீது போடப்பட்ட வழக்கை அரசு உடனே வாபஸ் பெற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.