சென்னை மாநகரில் 2-ம் கட்டமாக ரூ.61 ஆயிரத்து 843 கோடி மதிப்பில் 118.9 கிலோ மீட்டர் தூரத்துக்கு 3 வழித்தடங்களில் மெட்ரோ ரெயில் பாதை மற்றும் ரெயில் நிலையங்கள் கட்டும் பணி நடந்துவருகிறது. இதில் 128 ரெயில் நிலையங்கள் கட்டப்படுகின்றன. குறிப்பாக மாதவரம்-சிறுசேரி சிப்காட் இடையே 45.8 கிலோ மீட்டர் தூரத்துக்கு 3-வது வழித்தடமும், கலங்கரை விளக்கம்-பூந்தமல்லி இடையே 26.1 கிலோ மீட்டர் தூரத்துக்கு 4-வது வழித்தடமும், மாதவரம்-சோழிங்கநல்லூர் இடையே 47 கிலோ மீட்டர் தூரத்துக்கு 5-வது வழித்தடமும் அமைக்கப்படுகின்றன.
இதில் மாதவரம்-சிறுசேரி சிப்காட் இடையே அமைக்கப்படும் 3-வது வழித்தடம் வடசென்னை, மத்தியசென்னை, தென்சென்னை பகுதிகளை கடந்து செல்வதால் மிக முக்கியத்துவம் வாய்ந்த வழித்தடமாக கருதப்படுகிறது. இந்த வழித்தடம் பகுதியளவு சுரங்கமாகவும், பகுதியளவு உயர்த்தப்பட்ட பாதையில் ரெயில் நிலையம் மற்றும் ரெயில் பாதைகளுடனும் அமைக்கப்படுகிறது.
இந்த பணிகளுக்கான ஒப்பந்தப்புள்ளி கோரும்போது தொகைகளை அதிகமாக கேட்பதால் ஒப்பந்தபுள்ளிகள் ரத்து செய்யப்பட்டு மீண்டும் புதிய ஒப்பந்தப்புள்ளி கோரப்படுகிறது. இதற்கு சற்று காலஅவகாசம் தேவைப்படுகிறது. குறிப்பாக மாதவரம் பால்பண்ணையில் இருந்து சுரங்கம் தோண்டும் பணி கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கி நடந்துவருகிறது. இதனால் மாதவரம்-தரமணி இடையே சுரங்க ரெயில் நிலையங்கள் அமைக்க மேலும் 1 ஆண்டு காலதாமதம் ஏற்படலாம் என்றும் கணக்கிடப்பட்டு உள்ளது.
இருந்தாலும் பணிகளை விரைந்து முடிப்பதற்காக சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. குறிப்பாக பணிகளை ஒரே கட்டுமான நிறுவனத்திடம் வழங்காமல் பல்வேறு நிறுவனங்களிடம் பிரித்து வழங்குவதன் மூலம் பணிகள் விரைந்து முடிக்க முடியும் என்பதால் அந்தவகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:-
மாதவரம்-தரமணி இடையே ரெயில் நிலையங்கள் அமைப்பதற்கு கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 6 ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டன. அதில் கலந்துகொண்ட ஒப்பந்ததாரர்கள் ரெயில் நிலைய கட்டுமானத்துக்கு அதிக விலையை கோடிட்டு காட்டியிருந்தனர். இதனால் இந்த ஒப்பந்தப்புள்ளிகளை ரத்து செய்யவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. தொடர்ந்து புதிய ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டன. மாதவரம்-தரமணி பிரிவில் நிலத்தடியில் கட்டப்படும் சுரங்கப்பாதை அமைக்கும் பணியால், சுரங்க ரெயில் நிலையங்கள் கட்டுவதில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
எனவே ஒப்பந்ததாரர்கள் பணிகளை விரைவாக செயல்படுத்துவதற்காக மாதவரம்-பெரம்பூர், அயனாவரம்-கெல்லீஸ், கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி-ராயப்பேட்டை, டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை-அடையாறு சந்திப்பு, அடையாறு பணிமனை-தரமணி, கொளத்தூர்-நாதமுனி வரை 6 தொகுப்புகளாக பிரிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் மாதவரம்-தரமணி இடையே சுரங்க ரெயில் நிலையம் அமைக்க முதல்கட்டமாக 3 ஒப்பந்ததாரர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.
மாதவரம்-பெரம்பூர் இடையே சுரங்க ரெயில் பாதை அமைக்க தினேஷ் சந்திரா அகர்வால் இன்ப்ராகான் பிரைவேட் லிமிடெட் மற்றும் சேமா எண்டர்பிரைசஸ் நிறுவனமும், அயனாவரம்-கெல்லீஸ் இடையே நீட்டிப்புக்கான பணியில் டாடா புராஜக்ட்ஸ் நிறுவனமும் குறைந்த ஏலத்தொகையை கோடிட்டு காட்டியுள்ளன. ரெயில் விகாஸ் நிகாம் லிமிடெட் கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி-ராயப்பேட்டை மற்றும் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை-அடையாறு சந்திப்பு மற்றும் அடையாறு பணிமனை-தரமணி ஆகிய மீதமுள்ள பகுதிகளின் பணிகளை பெற்றுள்ளது.
விரைவில் இதுதொடர்பாக ஆலோசனை நடத்திவிட்டு, மீதம் உள்ள ஒப்பந்தங்களையும் அந்தந்த நிறுவனங்களுக்கு வழங்கப்பட உள்ளது. இந்த நிறுவனங்களுக்கு சுரங்க ரெயில் நிலையங்களின் கட்டுமானப் பணிகளை முடிக்க 3 ஆண்டுகள் அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது. இந்தப் பாதையில் சுரங்கப்பாதை அமைக்கும் பணி தீவிரமாக நடந்துவருகிறது.
இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.