வேலூர் மாவட்டத்தில் காகிதப்பட்டறை, காட்பாடி, வேலூர், குடியாத்தம், பேரணாம்பட்டு, பள்ளிகொண்டா ஆகிய இடங்களில் உழவர் சந்தைகள் செயல்படுகின்றன. விவசாயிகள் தாங்கள் விளைவிக்கும் விவசாய பொருட்களை இங்கு கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். வெளிமார்க்கெட்டில் விற்பனை செய்யப்படும் பொருட்களின் விலையில் இருந்து இங்கு சற்று குறைவாக விற்பனை செய்யப்படுவதால் ஏராளமான பொதுமக்கள் உழவர் சந்தைக்கு சென்று பொருட்களை வாங்கி செல்கின்றனர்.
இந்த நிலையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஏராளமானோர் உழவர் சந்தைக்கு சென்று காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட பொருட்களை வாங்கி சென்றனர். அதன்படி நேற்று ஒரே நாளில் சுமார் 100 டன் காய்கறிகள், பழங்கள் விற்பனையாகி உள்ளது. இதன் மூலம் சுமார் 600-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பயனடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.