செங்கல்பட்டு கலெக்டர் அலுவலக வளாக கூட்டரங்கில் நேற்று விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் தலைமையில் நடைபெற்று கொண்டிருந்தது. அப்போது கூட்டரங்கத்தின் வெளியே 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் திடீரென தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார்.
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த செங்கல்பட்டு டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் அவரை பிடித்து தண்ணீரை ஊற்றி குளிக்க வைத்து விசாரணை மேற்கொண்டார்.
விசாரணையில் அவர் திருக்கழுக்குன்றம் தாலுகா தாழம்மேடு பகுதியை சேர்ந்த புருஷோத்தமன் (வயது 40) என்பதும், அவரது வீட்டுமனை பட்டா மற்றொரு பெயரில் பட்டா மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் அதை மீண்டும் மாற்றி தன்னுடைய பெயரில் பட்டா வழங்கும்படி 2 ஆண்டுகளாக மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் விரக்தி அடைந்த புருஷோத்தமன் கையில் கொண்டு வந்த மண்எண்ணெய்யை தனது உடலில் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார் என்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.