தமிழக செய்திகள்

துணை ஜனாதிபதி தேர்தலில் வெற்றி - சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு செங்கோட்டையன் வாழ்த்து

சி.பி.ராதாகிருஷ்ணன் துணை ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டது பொன்னேட்டில் எழுதப்பட வேண்டிய நாள் என செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

டெல்லியில் நேற்று நடைபெற்ற துணை ஜனாதிபதி பதவிக்கான தேர்தலில், பா.ஜ.க. கூட்டணி வேட்பாளராக களமிறங்கிய சி.பி.ராதாகிருஷ்ணன், 452 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிட்ட சுதர்சன் ரெட்டி 300 வாக்குகளை மட்டுமே பெற்றிருந்தார். இதன் மூலம் சி.பி.ராதாகிருஷணன், இந்தியாவின் துணை ஜனாதிபதியானார்.

இந்நிலையில், துணை ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு அ.தி.மு.க. எம்.எல்.ஏ. செங்கோட்டையன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-

இன்றைய உலக தலைவர்களில் முதன்மையானவராக திகழும் பாரத பிரதமர் நரேந்திர மோடியாலும், இந்திய திருநாட்டின் இன்றைய இரும்பு மனிதராக திகழும் உள்துறை மந்திரி அமித்ஷாவாலும் முன்மொழிபட்டவரும், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித்தலைவி ஜெயலலிதா ஆகியோரின் அன்பை பெற்றவருமான சி.பி.ராதாகிருஷ்ணன், வேற்றுமையில் ஒற்றுமை காணும் பாரத திருநாட்டின் துணை ஜனாதிபதியாக தேர்வுபெற்றுள்ள நாள், இந்நாட்டின் பொன்னேட்டில் எழுதப்படும் திருநாள் ஆகும். தன் பணிக்காலத்தில் இந்திய தேசத்தை உயரத்திற்கு எடுத்துச் செல்ல மனம்கனிந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.