தமிழக செய்திகள்

செந்தில் பாலாஜி வழக்கு: கூடுதல் குற்றப்பத்திரிகைக்கு ஒப்புதல் கிடைக்கவில்லை- கோர்ட்டில் போலீஸ் தகவல்

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கின் கூடுதல் குற்றப்பத்திரிகைக்கு ஒப்புதல் மற்றும் விசாரணைக்கு அனுமதி கிடைக்கவில்லை என்று கோர்ட்டில் போலீசார் தெரிவித்தனர்.

தினத்தந்தி

சென்னை,

செந்தில் பாலாஜி, கடந்த 2011-15ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது, வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக சென்னை காவல் ஆணையரிடம் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தனர்.இதன் அடிப்படையில் செந்தில்பாலாஜி, அவரது நண்பர்கள் பிரபு, சகாயராஜன், அன்னராஜ் ஆகியோர் மீது நம்பிக்கை மோசடி, ஏமாற்றுதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கடந்த 2015 ஆண்டு வழக்குகளை பதிவு செய்தனர்.

இந்த வழக்கு சென்னை எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இந்த வழக்கில் இருந்து செந்தில் பாலாஜி உள்ளிட்டோரை விடுவித்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்த உச்ச நீதிமன்றம், வழக்கை செப்டம்பர் 30 தேதிக்குள் விசாரித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துறைக்கு உத்தரவிட்டது.

இதனையடுத்து விசாரணை நடத்திய மத்திய குற்றபிரிவு காவல்துறை, செந்தில் பாலாஜிக்கு எதிராக சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள எம்.பி, எம்.எல்.ஏகள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த செப்டம்பர் மாதம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். அப்போது இந்த வழக்கில் குற்றம்சாட்டபட்ட இன்னும் சிலரை விசாரிக்க அனுமதி மற்றும் ஒப்புதல் கடிதம் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி ஜெயவேல் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கூடுதல் குற்றப்பத்திரிகைக்கு ஒப்புதல் மற்றும் இன்னும் சிலரை விசாரிப்பது தொடர்பான அனுமதி கிடைக்கவில்லை என தெரிவித்தார். இதனையடுத்து வழக்கு விசாரணையை ஜனவரி 3 தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்