சேலம்,
சேலம் எடப்பாடியில் புதிதாக கட்டப்பட்டுள்ள உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தை, உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமானி திறந்து வைத்தார். புதிய நீதிமன்றம் திறப்பு விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் சி.வி.சண்முகம், நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் பங்கேற்றனர்.
திறப்பு விழாவில் முதலமைச்சர் பழனிசாமி பேசியதாவது:-
நீதியரசர்களும், ஆசிரியர்களும் இறைவனுக்கு சமமானவர்கள். சேலம் மாவட்டத்தில் மக்கள் நீதிமன்றங்கள் மூலம் அதிக வழக்குகள் விசாரிக்கப்பட்டு நீதி வழங்கப்பட்டு வருகிறது. தற்போது எடப்பாடியில் புதிய நீதிமன்றம் திறக்கப்பட்டதன் மூலம் விரைவில் நீதி கிடைக்க வழிவகை ஏற்படும்.
நீதித்துறையை கணிணிமயமாக்குவதற்கு தமிழக அரசு போதிய நிதி ஒதுக்கி இருக்கிறது. உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.
தமிழக அரசின் முயற்சியால் உச்சநீதிமன்ற தீர்ப்புகள் தமிழில் வெளியிடப்படுகிறது. தமிழகத்தில் பாலியல் வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன்றம் அமைக்க அரசு பரிந்துரை செய்யும் என்று தெரிவித்தார்.