தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 17 வயது நிரம்பிய சிறுவன், சென்னையில் உள்ள ஒரு லேத் பட்டறையில் வேலை பார்த்து வந்தான். இந்த நிலையில் கோவில் திருவிழாவிற்காக அந்த சிறுவன் சொந்த ஊருக்கு வந்துள்ளான். அப்போது பிளஸ்-1 மாணவி ஒருவர், வீட்டின் பின்புறம் குளித்துக்கொண்டு இருந்ததை அந்த சிறுவன் பார்த்துள்ளான். அந்த மாணவி குளிப்பதை அவருக்கு தெரியாமல் அந்த சிறுவன் தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளான்.
பாலியல் தொந்தரவு
அந்த வீடியோவை அந்த மாணவியிடம் காண்பித்த அந்த சிறுவன், மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளான். அந்த சிறுவனின் ஆசைக்கு அந்த மாணவி மறுப்பு தெரிவித்து உள்ளார். இதனையடுத்து அந்த வீடியோவை அந்த சிறுவன் தனது நண்பர்களுக்கு பகிர்ந்துள்ளான். இது குறித்து அறிந்த மாணவியின் பெற்றோர், அந்த சிறுவனின் தந்தையிடம் முறையிட்டுள்ளனர்.
போலீசில் புகார்
அதைக்கேட்டு மகனை கண்டிக்க வண்டிய தந்தையோ, தனது மகன் அப்படித்தான் செய்வான் என்று பொறுப்பற்ற முறையில் பதில் அளித்துள்ளார். இது குறித்து மாணவியின் பெற்றோர் திருநீலக்குடி போலீசில் புகார் செய்தனர்.
தந்தை-மகன் கைது
புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தந்தை-மகன் ஆகிய இருவரையும் போக்சோ வழக்கில் கைது செய்தனர். பிளஸ்-1 மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் வாலிபரும், அவருக்கு உடந்தையாக இருந்த தந்தையும் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.