ராமேசுவரம்,
இலங்கையில் தலைமன்னாரில் இருந்து ராமேசுவரத்தை அடுத்த தனுஷ்கோடி வரை கடலில் 28.5 கிலோ மீட்டர் தூரத்தை நீந்தி கடந்து நிறைய பேர் சாதனை படைத்துள்ளனர். நீச்சல் வீரரான குற்றாலீசுவரன் சிறுவனாக இருந்த போது இவ்வாறு நீந்தி சாதனை படைத்தார். அதன் பின்னர் போலீஸ் ஏ.டி.ஜி.பி. சைலேந்திரபாபு உள்பட பல வீரர்கள் நீந்தி கடந்துள்ளனர். ஆனால் அவர்கள் அனைருவரும் ஆண்கள்.
இந்தநிலையில் முதன்முறையாக தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த 48 வயது ஆசிரியையும், நீச்சல் வீராங்கனையுமான சியாமளா ஹோலி நேற்று நீந்தி புதிய சாதனை படைத்துள்ளார்.
இதற்காக சியாமளாஹோலி சில நாட்களுக்கு முன்பு ராமேசுவரம் வந்தார். நேற்று முன்தினம் அவர் படகு மூலமாக இலங்கை சென்றார். அவருடன் பாதுகாப்புக்காக பயிற்சியாளர் மற்றும் ராமேசுவரத்தை சேர்ந்த ரோஜர் பர்னாண்டோ உள்பட 13 பேர் சென்றனர்.
13 மணி 35 நிமிட நேரம்
இலங்கை தலைமன்னார் கடற்கரையில் இருந்து நேற்று அதிகாலை 4.15 மணி அளவில் ஆசிரியை சியாமளாஹோலி கடலில் நீந்த தொடங்கினார். நேற்று மாலை 5.50 மணி அளவில் தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரையை வந்தடைந்தார்.
இவர் தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடி வரையிலான 28.5 கிலோ மீட்டர் தூரத்தை 13 மணி 35 நிமிட நேரத்தில் நீந்தி கடந்து சாதனை படைத்துள்ளார்.
இதுகுறித்து சியாமளாஹோலி கூறியதாவது:-
இந்தியாவில் பல நதிகளில் நீந்தி உள்ளேன். கடலில் நீந்தியது இதுதான் முதல் முறை. கடலில் நீந்த வேண்டும் என்பது எனது லட்சியம், கனவாக இருந்தது. அதற்காக கடந்த ஆண்டு தலைமன்னார்-தனுஷ்கோடி இடையே கடலில் நீந்த வேண்டும் என திட்டமிட்டு இருந்தேன்.
கொரோனா காரணமாக அந்த திட்டம் அப்போது கைவிடப்பட்டது.
மிகுந்த மகிழ்ச்சி
தற்போது இந்த சாதனையை படைக்க இந்திய அரசும், இலங்கை அரசும் அனுமதி வழங்கின. இலங்கை கடல் பகுதியில் கடல் நீரோட்டம் நீந்துவதற்கு சாதகமாக இருந்தது. அதனால் வேகமாக நீந்த முடிந்தது. ஆனால், இந்திய கடல் எல்லையில் இருந்து, தனுஷ்கோடி அரிச்சல் முனை வரையிலும் கடல் நீரோட்டத்தின் வேகம் மிக அதிகமாக இருந்ததால் நீந்துவதற்கு மிகவும் சிரமப்பட்டேன். கஷ்டமாகவும் இருந்தது. 28.5 கிலோ மீட்டர் தூரத்தை 13 மணி நேரம் 35 நிமிடத்தில் கடந்தது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது.
அடுத்தகட்டமாக ஆங்கில கால்வாயில் நீந்த வேண்டும் என்பது எனது இலக்கு.
இவ்வாறு அவர் கூறினார்.
புதிய சாதனை படைத்த ஆசிரியை சியாமளாஹோலிக்கு பாராட்டு குவிந்து வருகிறது.