பிரதோஷத்தையொட்டிதர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து சிவன் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பிரதோஷ சிறப்பு வழிபாடு
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து சிவன் கோவில்களிலும் நேற்று பங்குனி மாத பிரதோஷத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி நந்தி மற்றும் லிங்கத்துக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றன. இதில் அந்தந்த பகுதியைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தர்மபுரி நகரில் பிரசித்தி பெற்ற கோட்டை கல்யாண காமாட்சி அம்மன் உடனாகிய மல்லிகார்ஜுன சாமி கோவிலில் பிரதோஷ சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி முதலில் நந்திக்கு பல்வேறு வகையான வாசனை திரவியங்கள், பழங்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து மூலவருக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் உபகார பூஜைகளும், மகா தீபாராதனை நடைபெற்றன. பின்னர் கோவில் வளாகத்திலேயே சாமி திருவீதி உலா நடந்தது. இந்த சிறப்பு வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது
நெசவாளர் நகர்
இதேபோன்று தர்மபுரி நெசவாளர் நகரில் உள்ள மங்களாம்பிகை உடனாகிய மகாலிங்கேஸ்வரர் கோவிலில் பிரதோஷத்தையொட்டி நந்தி மற்றும் மகாலிங்கேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. தர்மபுரி குமாரசாமிப்பேட்டை சிவகாமசுந்தரி உடனாகிய ஆனந்த நடராஜர் கோவிலில் நடைபெற்ற பிரதோஷ வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதேபோல் தர்மபுரி கடைவீதி அம்பிகா பரமேஸ்வரி அம்மன் உடனாகிய மருதவாணேஸ்வரர் கோவில், தீயணைப்பு நிலைய வளாகத்தில் உள்ள பிரகதாம்பாள் சமேத அருளீஸ்வரர் கோவில், அன்னசாகரம் சோமேஸ்வரர் கோவில், சவுலுப்பட்டி ஆதி லிங்கேஸ்வரர் கோவில் உள்ளிட்ட தர்மபுரி நகரை சுற்றியுள்ள அனைத்து சிவன் கோவில்களிலும் பிரதோஷ சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
நல்லகுட்லஅள்ளி
கடத்தூர் அருகே உள்ள நல்லகுட்லஅள்ளி சிவசக்தி ஈஸ்வரர் கோவிலில் பிரதோசத்தையொட்டி நந்திக்கு பால், நெய், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், தயிர் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.
இதேபோன்று மாவட்டத்தின் முக்கிய கோவில்களான தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் கோவில், காரிமங்கலம் மலையில் உள்ள அருணேஸ்வரர் கோவில் உள்ளிட்ட அனைத்து சிவன் கோவில்களிலும் பிரதோஷத்தையொட்டி நேற்று சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.
பாப்பிரெட்டிப்பட்டி
பாப்பிரெட்டிப்பட்டி அருகே பையர்நத்தம் கிராமத்தில் உள்ள அமிர்தேஸ்வரர், அன்னை ஸ்ரீ அமிர்தாம்பிகை கோவிலில் தேய்பிறை பிரதோஷத்தையொட்டி சிறப்பு பூஜை நடந்தது. இதையொட்டி நந்திக்கு, பால், பன்னீர், மஞ்சள், சந்தனம், தேன், இளநீர், எலுமிச்சை, தயிர், அபிஷேக பொடி உள்ளிட்ட பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து நந்திக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.