தமிழக செய்திகள்

வகுப்பறையில் விஷம் குடித்து மயங்கி விழுந்த பிளஸ்-1 மாணவி: அதிர்ச்சி சம்பவம்

மாணவிக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

நாகர்கோவில்,

நாகர்கோவிலில் பள்ளி வகுப்பறையில் பிளஸ்-1 மாணவி விஷம் குடித்து மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

வகுப்பறையில்..

நாகர்கோவில் வடசேரி பகுதியை சேர்ந்த 17 வயதுடைய மாணவி ஒருவர் நாகர்கோவிலில் உள்ள ஒரு மகளிர் பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் வழக்கம் போல் வீட்டில் இருந்து பள்ளிக்கு வந்தார். அவர் வகுப்பறையில் இருந்தபோது திடீரென மயங்கி விழுந்தார்.

இதைபார்த்து சக மாணவிகளும், ஆசிரியர்களும் அதிர்ச்சி அடைந்தனர். ஆசிரியர்கள் மாணவியை மீட்டு சிகிச்சைக்காக நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு மாணவியை பரிசோதித்த டாக்டர்கள், அவர் விஷம் குடித்திருப்பதைக் கண்டறிந்தனர்.

காரணம் என்ன?

இதுகுறித்து மாணவியின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்தனர். மேலும் தகவல் அறிந்த கோட்டார் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாணவியிடம் விசாரணை நடத்தினர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் மாணவிக்கு கடந்த சில நாட்களாக படிப்பு சரியாக வரவில்லை எனக்கூறப்படுகிறது. இதனால் அவர் மன வருத்தத்தில் இருந்துள்ளார்.

அவரை பெற்றோர் சமாதானப்படுத்திய போதிலும், மிகுந்த மன அழுத்தத்தில் காணப்பட்டுள்ளார். இந்தநிலையில் மாணவி வகுப்பறையில் விஷம் குடித்ததாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. மேலும் மாணவிக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பள்ளி வகுப்பறையில் மாணவி விஷம் குடித்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

SCROLL FOR NEXT