தமிழக செய்திகள்

ரெயிலில் சீட்டுக்கு அடியில் 5 நாட்களாக அழுகி கிடந்த பெண் சடலம்: அதிர்ச்சி சம்பவம்

ரெயில் பெட்டியில் பெண் சடலம் மீட்கப்பட்ட சம்பவத்தில் 2 தனிப்படைகள் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளது.

நாகர்கோவில்,

நாகர்கோவில் ரெயில் நிலைய யார்டில் நின்ற ரெயில் பெட்டிக்குள் அழுகிய நிலையில் பிணமாக மீட்கப்பட்ட பெண் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பயணிகள் ரெயில்

நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்து நாகர்கோவில் மற்றும் கன்னியாகுமரிக்கு ரெயில்கள் இயக்கப்படுகின்றன. வெளியூர்களில் இருந்து ரெயில்கள் வந்தடைந்ததும், அடுத்த பயணத்திற்காக நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலையத்தில் உள்ள யார்டுக்கு கொண்டு செல்லப்பட்டு சுத்தம் செய்தல் மற்றும் பராமரிப்பு போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம். அந்த வகையில் கடந்த 11-ந் தேதி திருவனந்தபுரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு வந்த பயணிகள் ரெயில் பெட்டிகள் சுத்தம் செய்வதற்காக யார்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

இந்த நிலையில் நேற்று பகல் 1 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து கேரள மாநிலம் கோட்டயத்திற்கு புறப்படும் பயணிகள் ரெயிலில் இணைப்பதற்காக ஏற்கனவே யார்டில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த பெட்டிகளை தயார் செய்யும் பணி நடந்தது.

அழுகிய நிலையில் பிணம்

அப்போது ஒரு பெட்டியில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் சந்தேகமடைந்த ஊழியர்கள் பெட்டிக்குள் ஏறி சோதனை செய்தபோது அந்த பெட்டியில் இருக்கைக்கு கீழ் அழுகிய நிலையில் ஒரு சடலம் கிடந்தது.

இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் உடனே இதுபற்றி ரெயில்வே போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று ஆய்வு செய்தனர். அப்போது சடலமாக கிடந்தது பெண் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் முகம் அடையாளம் தெரியாத அளவுக்கு அழுகிய நிலையில் இருந்தது. பின்னர் பிணத்தை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

சடலமாக கிடந்த பெண் இறந்து 5 நாட்களுக்கு மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால் அவர் யார்? எப்படி இறந்தார்? என்பது தெரியவில்லை?. ரெயிலில் பயணம் செய்து வந்தபோது உடல்நலக்குறைவால் உயிரிழந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது தெரியவில்லை. எனவே சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ரெயில்வே அதிகாரிகள் விசாரணை

இதுகுறித்து ரெயில்வே போலீசார் கூறுகையில், "சம்பந்தப்பட்ட பெண் இறந்து 5 நாட்கள் தான் ஆகியிருக்கும். ஆனால் ரெயில் பெட்டிகள் கடந்த ஒரு வாரமாக நிற்கிறது. கடந்த 11-ந்தேதி முதல் அந்த ரெயில் பெட்டி யார்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அதில் சுத்தம் செய்யும் பணி மற்றும் பராமரிப்பு பணியை ரெயில்வே ஊழியர்கள் மேற்கொண்டதாக கூறப்படுகிறது.

அப்போது ரெயிலில் சடலம் கிடந்ததை ஊழியர்கள் கவனிக்காமல் போனார்களா? இல்லை எனில் இறந்த பெண் யார்டில் நிறுத்தியிருந்த ரெயில் பெட்டியில் ஏறி அமர்ந்திருந்த போது உடல் நலக்குறைவால் இறந்தாரா? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது" என்றனர்.

கொலை வழக்கு

இதற்கிடையே ரெயில் பெட்டிக்குள் சடலம் கிடந்ததை ரெயில்வே ஊழியர்கள் எப்படி பார்க்காமல் இருந்தார்கள்? என்பது தெரியவில்லை. பெட்டிக்குள் இருந்து துர்நாற்றம் வீசிய பிறகும் ஊழியர்களுக்கு தெரியாமல் போனது எப்படி? என்பது குறித்து ரெயில்வே அதிகாரிகள் துறை ரீதியான விசாரணையை தொடங்கி உள்ளனர்.

தற்போது பெண் சடலம் மீட்கப்பட்ட வழக்கை கொலை வழக்காக மாற்றி 2 தனிப்படைகள் அமைத்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். யார்டு பகுதியில் பொதுமக்கள் செல்ல வாய்ப்பில்லை என்பதால், ரெயில்வே ஊழியர்களிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், ரெயில் கடந்த 11-ஆம் தேதி திருவனந்தபுரத்திலிருந்து வந்ததால், திருவனந்தபுரம் முதல் நாகர்கோவில் வரையிலான அனைத்து ரெயில் நிலையங்களிலும் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர்.

SCROLL FOR NEXT