சென்னை,
பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தலைமை செயலகத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-
அம்மாவினுடைய வழி காட்டுதலிலே நடைபெறுகின்ற இந்த அரசு பள்ளிக்கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்களை உருவாக்கி வருகின்றது. அதன் அடிப்படையில், கல்வியை கற்றுத் தருகின்ற முறைகள், சமூக சேவைகள் ஆகியவற்றில் சிறப்பாக செயல்படும் 192 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு கனவு ஆசிரியர் விருது வழங்கப்படும். அவர்களுக்கு ரூ.10 ஆயிரம் பரிசுத் தொகையும், சான்றி தழும் வழங்கப்படும்.
இதற்கு அரசாணை பிறப்பிக்கப்பட்டிருக்கின்றது.
ஆசிரியர்களை ஊக்கப்படுத்துகின்ற வகையில் அவர்களுக்கு கையேடுகளை தர இருக்கின்றோம். மாணவர்களுக்கு ஆசிரியர்கள் பயத்தை போக்கும் வகையில் செயல்பட வழிகாணப்படும்.
மேலும் பாடத்துடன் மாணவர்களுக்கு நற்பண்புகளை வழங்க திட்டமிடப் பட்டுள்ளது. இதற்காகத்தான் கற்பித்தலும், கற்றலும் என்ற முறையில் ஆசிரியர்களுக்கு கையேடு வழங்கப்பட உள்ளது. எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாறும் பாடத் திட்டத்தில் இடம் பெறும்.
புரட்சித்தலைவர் எம்.ஜி. ஆரின் நூற்றாண்டு விழா சமீபத்தில் தூத்துக்குடியில் நடந்தபோது டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு சிறப்பு சேர்க்கின்ற வகையில் அவருக்கு மணி மண்டபம் கட்டித்தரப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டார்.
தினத்தந்தி நிறுவனர் சி.பா.ஆதித்தனாருக்கு சிறப்பு சேர்க்கின்ற வகையில் ஊடகத் தமிழில் எழுத்துச் சீர்திருத்தம் அவர் கொண்டு வந்ததை மனதில் வைத்து எதிர்காலத்தில் பாடத் திட்டங்களை நாங்கள் மாற்றும்போது அந்த எழுத்து சீர்திருத்தமும் இடம் பெறும்.
அந்த வகையில் சி.பா.ஆதித்தனார் ஏற்படுத்திய ஊடகத் தமிழ் சீர்திருத்தத்தை 11-ம் வகுப்பு பாடத் திட்டத்தில் இணைக்க இருக்கின்றோம் என்பதை நான் மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கின்றேன்.
ஊடகத் தமிழ் என்ற முறையில் அவருடைய எழுத்துச் சீர்திருத்தம், அவர் முதன்முதலில் துவங்கிய போது, தினத்தந்தியிலே எளிமையாக வருகின்ற எழுத்துக்களை சாதாரண கிராமத்திலே இருக்கின்ற, ஏழை, எளிய மக்கள் டீக்கடையில் கூட சென்று அவர்கள் கற்றுக் கொள்கின்ற அளவிற்கு இருந்தது.
அந்த எளிமையான எழுத்துச் சீர்திருத்தத்தை, மாணவர்களும் புரிந்து கொள்கின்ற அளவிற்கு சீர்திருத்த முறையில் கொண்டு வந்திருக்கின்றார் என்பதை பல்வேறு தலை வர்களுடைய நிலைகளில் கொண்டுவருவதைப்போல இவரும் பாடத் திட்டத்தில் இடம் பெற இருக்கின்றார்.
ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் கையேட்டில் பல்வேறு சிறப்புகள் இருக்கின்றது. மாணவர்களுக்கு எப்படி கல்வியை கற்றுத் தருகின்றோம், மாணவர்களுக்கான நற்பண்புகள், தேவை யான பயிற்சிகள், எதிர்காலம், தன்னம்பிக்கை, கற்றல், கற்பித்தல், போன்ற பல்வேறு நிலைகள் அறிவு, ஆற்றல் போன்ற அனைத்தும் அதில் இணைக்கப்பட்டிருக்கின்றது.
மத்திய அரசு கொண்டு வருகின்ற பொதுத்தேர்வு களுக்காக, ஸ்பீடு நிறுவனத்தின் மூலம் 100 இடங்களில் பயிற்சி அளிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டிருக்கின்றது. இதில் 75 ஆயிரம் மாணவர்கள் இடம் பெற்றிருக்கின்றார்கள். மீதமுள்ள 312 மையங்களுக்கும் ஜனவரி 15--ந்தேதிக்குள் அந்தப் பணிகள் நிறைவுபெறும். அதற்குப் பிறகு அனைத்து மையங்களிலும் இதனை நிறைவேற்றுவதற்கு அரசு நடவடிக்கை மேற்கொண் டிருக்கின்றது. இவ்வாறு அவர் கூறினார்.