தமிழக செய்திகள்

திருமூர்த்தி அணையில் வண்டல் மண் அள்ளும் பணி பாதிப்பு

திருமூர்த்தி அணையில் வண்டல் மண் அள்ளும் பணி பாதிப்பு

தளி

மழை காரணமாக திருமூர்த்தி அணையில் வண்டல் மண் அள்ளும் பணி பாதிக்கப்பட்டுள்ளது.

திருமூர்த்தி அணை

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உற்பத்தியாகின்ற பாலாறு, உழுவிஆறு, கொட்டையாறு, பாரப்பட்டிஆறு, குருமலைஆறு, வண்டியாரு, உப்புமண்ணம்ஓடை, கிழவிபட்டிஓடை உள்ளிட்ட ஆறுகள், ஓடைகளை நீராதாரமாக கொண்டு திருமூர்த்தி அணை கட்டப்பட்டது. அது தவிர அணையின் உயிர்நாடியாக அப்பநீராறு, லோயர்நீராறு, சோலையாறு, ஆனைமலையாறு, பரம்பிக்குளம், தூணக்கடவு, பெருவாரிப்பள்ளம், ஆழியார், அப்பர் ஆழியார் உள்ளிட்ட அணைகள் விளங்கிவருகிறது. இந்த அணைகளுக்கும், திருமூர்த்தி அணைக்கும் காண்டூர் கால்வாய் இணைப்பு பாலமாக உள்ளது. இந்த அணை மூலம் கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் 3 லட்சத்து 76 ஆயிரத்து 152 ஏக்கர் நிலங்கள் பி.ஏ.பி. பாசனத் திட்டத்தின் கீழ் பாசன வசதி பெற்று வருகிறது.

அணைகட்டப்பட்ட பிறகு முறையாக தூர்வாரப்படாத அதன் நீர்ப்பரப்பில் 20 சதவிகிதம் மண் தேங்கி உள்ளது. இதனால் நீர்த்தேக்க பரப்பளவும் படிப்படியாக குறைந்து வந்தது.

வண்டல் மண்

அதைத்தொடர்ந்து விவசாயிகள் கோரிக்கை விடுத்ததின் பேரில் 2019-ம் ஆண்டில் அணையில் தூர்வாரும் பணிகள் தொடங்கப்பட்டது. அதன்பின்னர் பணிகள் நிறுத்தப்பட்டது. இதையடுத்து அணையை மீண்டும் தூர்வார வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. வண்டல்மண் அள்ளுவதற்கு அதிகாரிகள் தரப்பில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதுடன் அனுமதி அளிப்பதற்கும் காலதாமதம் ஏற்பட்டது. இதனால் விவசாயிகள் போராட்டத்துக்குப் பிறகு அனுமதி பெற்று கடந்த சில நாட்களுக்கு முன்பாக வண்டல் மண் அள்ளும் பணியை தொடங்கினார்கள்.

ஆனால் மழை காரணமாக மண் எடுக்கும் பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டு உள்ளது. இதனால் அணை ஆழமாவதில் தடங்கல் ஏற்பட்டு உள்ளது. மழை பொழிவு குறைந்த உடன் மீண்டும் வண்டல் மண் அள்ளும் பணிகள் தொடங்க உள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர். தற்போது அணையில் குறைந்த அளவு நீர் உள்ளதால் வண்டல் மண் அள்ளுவதற்கும் சாதகமான சூழல் நிலவுகிறது.