சென்னை,
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரை சேர்ந்த வக்கீல் ராம்குமார் ஆதித்தன், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:-
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தமிழகத்தில் கடந்த ஜூலை மாதம் முதல் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் தளர்வில்லா முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.
இதனால் உணவகம், காய்கறி, பூ சந்தைகள், மளிகை பொருட்கள் என்று எல்லாம் தடைபடுகிறது. கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அறிவிக்கப்பட்டவுடன், அப்போது நடைபெற இருந்த திருமணங்கள் எல்லாம் ஆகஸ்டு மாதத்துக்கு தள்ளிவைக்கப்பட்டன. ஆகஸ்டு 28, 30, 31-ந்தேதிகளும், செப்டம்பர் 4, 14, 16 ஆகிய தேதிகளும் நல்ல முகூர்த்த நாட்களாகும்.
ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு உள்ளதால், திங்கட்கிழமைகளில் திருமணம் நடத்த முடியாத நிலை ஏற்படுகிறது. நாதஸ்வரம், பூ என்று திருமணம் தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியவில்லை. வருகிற 30-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) மற்றும் 31-ந்தேதி (திங்கட்கிழமை) நல்ல முகூர்த்த நாட்கள் என்பதால், திருமணம் நடத்தவும், திருமணம் தொடர்பான பணிகளை மேற்கொள்ளவும் பொதுமக்களுக்கு சிறப்பு பாஸ் வழங்கி அனுமதிக்க வேண்டும்.
சுபநிகழ்ச்சியில் பங்கேற்க செல்வோருக்கு வாகன போக்குவரத்து அனுமதிக்க வேண்டும். இதற்காக ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கில் தளர்வு வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.ஹேமலதா ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு தொடர்பாக முதல்-அமைச்சர் தலைமையில் நாளை (சனிக்கிழமை) ஆலோசனை கூட்டம் நடக்கவுள்ளதாக பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளதை படித்தோம். எனவே இந்த கூட்டத்தில் என்ன முடிவு எடுக்கப்படுகிறது? என்பதை பொறுத்து இந்த வழக்கை விசாரணைக்கு எடுக்கலாம் என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
பின்னர் விசாரணையை அடுத்த வாரத்துக்கு தள்ளி வைத்தனர்.