சிவகங்கை அருகே உள்ள காஞ்சிரங்கால் கிராமத்தை சேர்ந்தவர் ஜெக வீரபாண்டியன். இவர் ஸ்ரீநகரில் 28-வது ரெஜ்மென்ட்பிரிவில் எல்லை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் அவர் சக ராணுவ வீரர்களுடன் பணியில் இருந்தபோது திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்தார். அவரது உடல் ஸ்ரீநகரில் இருந்து விமானம் மூலமாக சென்னை கொண்டு வரப்பட்டு, அங்கிருந்து நேற்று சொந்த கிராமமான காஞ்சிரங்காலுக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டது.
பின்னர் ஜெகவீரபாண்டியன் உடலுக்கு ஸ்ரீநகர் ராணுவ சுபேதார் வைரம் தலைமையில் ராணுவ வீரர்கள், காரைக்குடி ரெஜிமென்ட் வீரர்கள் மரியாதை செலுத்தினர். தொடர்ந்து சிவகங்கை தொகுதி எம்.எல்.ஏ. செந்தில்நாதன், காஞ்சிரங்கால் ஊராட்சி மன்ற தலைவர் மணி முத்து மற்றும் அரசியல் கட்சியினர், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினார்கள். பின்னர் ஜெக வீரபாண்டியன் உடலுக்கு தேசியக்கொடி போர்த்தப்பட்டு ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. ஜெகவீர பாண்டியன் 19 வயதிலேயே ராணுவத்தில் சேர்ந்து பணியாற்றி வந்துள்ளார். எல்லை பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட இவர் 1999-ல் கார்கில் போர், 2001-2002-ல் பாகிஸ்தான் எல்லையில் நடந்த போரில் பங்கேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கு சித்ரா என்ற மனைவியும், விஷால் சேதுபதி என்ற மகனும், ஜெகஸ்ரீ என்ற மகளும் உள்ளனர்.