தமிழக செய்திகள்

ஈரானில் சிக்கித்தவித்த தமிழக, கேரள மீனவர்கள் 6 பேர் சென்னை திரும்பினர்

ஈரானில் சிக்கித்தவித்த தமிழக, கேரள மீனவர்கள் 6 பேர் சென்னை திரும்பி வந்தனர்.

தினத்தந்தி

ஆலந்தூர்,

கன்னியாகுமரி மாவட்டம் சின்னத்துறை கிராமத்தைச் சேர்ந்த வர்கீஸ், விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை சேர்ந்த ஆறுமுகம், கடலூரை சேர்ந்த ஏழுமலை, தஞ்சாவூரை சேர்ந்த சதீஷ் மற்றும் செல்லதுரை, கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் கொச்சுதோப்பை சேர்ந்த ஜஸ்டின் ஆகிய 6 மீனவர்கள், ஈரான் நாட்டை சேர்ந்த யாசின் என்பவரது விசைப்படகில் கடந்த 6 மாதத்துக்கு முன்பு மீன்பிடி வேலைக்கு சேர்ந்தனர்.

கடந்த 2 மாதங்களாக இவர்களது படகில் போதிய மீன் கிடைக்காததால் ஆத்திரமடைந்த இவர்களது முதலாளி, இவர்கள் அனைவருக்கும் இதுவரை வழங்க வேண்டிய பணபலன், போதிய உணவு, குடிதண்ணீர், மருத்துவ வசதி உள்ளிட்டவைகளை அளிக்காமல் அலைக்கழித்தார்.

ஈரானில் சிக்கி தவிப்பு

இதனால் வருவோர், போவோரிடம் கையேந்தும் நிலைக்கு தள்ளப்பட்ட இவர்கள், தங்களை தாய்நாட்டுக்கு அனுப்ப கோரிக்கை வைத்தனர். அதற்கு ஆளுக்கு தலா ரூ.1 லட்சம் தந்தால் உங்களை தாய்நாட்டுக்கு அனுப்பலாம் என அவர்களின் முதலாளி கூறி உள்ளார். இதனால் சரிவர உண்ணாமல் ஈரானில் சிக்கி தவித்தனர்.

தமிழக, கேரள மீனவர்கள் 6 பேரையும் மீட்கும்படி அவர்களின் உறவினர்கள் வேண்டுகோள் விடுத்தனர். இதையடுத்து சர்வதேச மீனவர் வளர்ச்சி அறக்கட்டளை தலைவர் ஜஸ்டின் ஆண்டனி, மத்திய-மாநில அரசுகளையும், ஈரானிலுள்ள இந்திய தூதரகத்தையும் தொடர்பு கொண்டு ஈரானில் உள்ள சிராஷ் என்னுமிடத்தில் தவிக்கும் மீனவர்களை மீட்டு தாய்நாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை வைத்தார்.

சென்னை வந்தனர்

இதையடுத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில் வெளிநாட்டு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் மற்றும் துறை அதிகாரிகள் மத்திய அரசுக்கும், ஈரானில் உள்ள இந்திய தூதரகத்துக்கும் கொடுத்த அழுத்தத்தின் காரணமாக தமிழக, கேரள மீனவர்கள் 6 பேரையும் மீட்டு, அவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு விமான டிக்கெட்டுகளும் வழங்கப்பட்டது.

இதையடுத்து 6 மீனவர்களும் ஈரானில் இருந்து புறப்பட்டு துபாய் வழியாக சென்னை வந்தனர். சென்னை விமான நிலையம் வந்த மீனவர்களுக்கு தமிழ்நாடு அரசு வெளிநாட்டு வாழ் தமிழர் நலத்துறை அதிகாரிகள் உணவு வழங்கி, வாகனங்களில் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது