தமிழக செய்திகள்

சாப்ட்வேர் என்ஜினீயரை தாக்கிய பெண் இன்ஸ்பெக்டருக்கு அபராதம்

சாப்ட்வேர் என்ஜினீயரை தாக்கிய பெண் இன்ஸ்பெக்டருக்கு அபராதம் விதித்து மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தினத்தந்தி

சென்னை,

தர்மபுரி மாவட்டம் பிடாமனேரியைச் சேர்ந்தவர் பாஸ்கர். சாப்ட்வேர் என்ஜினீயர். இவர், சென்னையில் உள்ள மாநில மனித உரிமை ஆணையத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருந்ததாவது:-

எனக்கும், சோனியா என்பவருக்கும் 2008-ம் ஆண்டு திருமணம் நடந்தது. சென்னை சூளைமேட்டில் குடும்பத்துடன் வசித்து வந்தேன். குடும்ப பிரச்சினையால் சோனியா அவரது தாயார் வீட்டிற்குச் சென்று விட்டார்.

அதன்பின்பு, கூலிப்படை உதவியுடன் எனது வீட்டுக்கதவை சோனியா உடைத்தார். இதுகுறித்து சூளைமேடு போலீசில் புகார் செய்தேன். இந்தநிலையில், என்னுடன் சேர்த்து வைக்க வேண்டும் என்று கோரி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சோனியா மனு கொடுத்தார். இந்த மனுவை ஆயிரம் விளக்கு மகளிர் போலீசார் விசாரித்தனர். அப்போது, இருவருக்கும் கவுன்சிலிங் வழங்கப்பட்டது. இருந்தபோதிலும் பிரச்சினைக்கு தீர்வு ஏற்படவில்லை.

கன்னத்தில் அடித்தார்

இதனால் விவாகரத்து கோரி, குடும்ப நல கோர்ட்டில் மனு தாக்கல் செய்தேன். அந்த மனு நிலுவையில் இருந்தபோது வரதட்சணை கேட்டு கொடுமைபடுத்துவதாக தர்மபுரி மகளிர் போலீஸ் நிலையத்தில் சோனியா புகார் அளித்தார்.

இந்த புகார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, எனது சகோதரர் பாலசுப்பிரமணியனை கைது செய்தனர். அந்த வழக்கில் நான் முன்ஜாமீன் பெற்று அதே போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட சென்றேன். அப்போது வழக்கை முடிக்க ரூ.50 ஆயிரம் லஞ்சமாக கொடுக்க வேண்டும் என்று அப்போதைய போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவிகாராணி கேட்டார்.

நான் மறுத்து விட்டேன். மறுநாள் கையெழுத்திட சென்றபோது எனது மனைவியை போலீஸ் நிலையத்துக்கு வரவழைத்து அவரை அழைத்து செல்லுமாறு இன்ஸ்பெக்டர் என்னை மிரட்டினார். நான், விவாகரத்து வழக்கு நிலுவையில் இருப்பதை சுட்டிக்காட்டிய போது என்னை தகாத வார்த்தைகளால் திட்டி கன்னத்தில் அடித்தார். என்னை தாக்கி மனித உரிமை மீறலில் ஈடுபட்ட இன்ஸ்பெக்டர் தேவிகாராணி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

அபராதம்

இந்த மனு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, வரதட்சணை புகாரை விசாரிக்கும்போது என்னென்ன நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதை அடிப்படையாக வைத்து சில விதிமுறைகளை வகுத்து டி.ஜி.பி. அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

இந்த விதிமுறைகளை இன்ஸ்பெக்டர் தேவிகாராணி பின்பற்றாமல் மனித உரிமை மீறலில் ஈடுபட்டுள்ளார். எனவே, தேவிகாராணிக்கு ரூ.30 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த தொகையை மனுதாரருக்கு தமிழக அரசு 2 மாதத்துக்குள் வழங்க வேண்டும். பின்னர், தேவிகா ராணியின் சம்பளத்தில் இருந்து அந்த தொகையை பிடித்தம் செய்து கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டார்.

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு

காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை