சென்னை,
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, தனியார் மருத்துவமனை சார்பில் கோபாலபுரத்தில் அமைந்துள்ள மாநகராட்சி மைதானத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கலந்துக்கொண்டு யோகா செய்தார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
சென்னைக்கு கூடுதலாக குடிநீர் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஏரிகளைக் குடிநீர் ஏரியாக மாற்ற ஜெயலலிதா நடவடிக்கை எடுத்தார். குறிப்பாக அயனம்பாக்கம் ஏரி, கொரட்டூர் ஏரிகளில் முறையே ரூ.32 கோடி மற்றும் ரூ.30 கோடி செலவில் குடிநீராக மாற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
சென்னையின் தாகத்தை ஓரளவுக்காவது தணிக்க முயன்று வருகிறோம். இதற்காக நாள் ஒன்றுக்கு 525 மில்லியன் லிட்டர் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. மழைநீர் சேகரிப்புத் திட்டத்தை முதன்முதலில் கொண்டு வந்தவர் ஜெயலலிதா. அந்தத் திட்டத்தைத் தீவிரப்படுத்த நடவடிக்கைகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
இன்னும் அடையாளம் காணப்படாத இடங்கள், குறிப்பாக குவாரிகளில் இருந்து தண்ணீர் எடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். இதன் மூலம் சென்னை மக்களின் குடிநீர் பிரச்சினை குறையும். தண்ணீர் பிரச்சினையை தீர்க்க போர்க்கால நடவடிக்கையை அரசு மேற்கொண்டு வருகிறது என்று கூறினார்.