சென்னை,
தஞ்சை மாவட்டத்தில் இன்று நடைபெற்ற த.வெ.க. நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில், அக்கட்சியின் தலைவர் விஜய் கலந்து கொண்டு பேசினார். இந்த கூட்டத்தில் விஜய் விளையாட்டாக சில விஷயங்களை பேசியதாகவும், அவர் கேட்டத்தில் சில கேள்விகள் மிகவும் நியாயமானவை என்றும் தமிழக பா.ஜ.க. முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது;-
“விஜய் நடத்தும் கூட்டங்களில் அவரது கட்சியினர் வெயிலில் கஷ்டப்படாமல் இருக்க மேற்கூரை போடப்பட வேண்டும் என்று முன்பு நான் கேட்டுக்கொண்டேன். தொடர்ந்து அடுத்த கூட்டங்களை அவர்கள் மேற்கூரையுடன் நடத்துகிறார்கள். அந்த வகையில், கூட்டத்திற்கு செல்பவர்கள் மயக்கமடையாமல், உயிரிழக்காமல் இருப்பார்கள் என்ற நிம்மதி நமக்கு ஏற்பட்டது.
ஆனால் விஜய்யின் வாகனத்திற்கு பின்னால் சென்று விபத்தில் சிக்குவது நல்லது இல்லை. அதை கட்டுப்படுத்த வேண்டும். தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வந்து கட்டுப்படுத்துவதற்கு முன்பு, தனது கட்சியின் கூட்டத்திற்கு வருபவர்களை கட்டுப்படுத்தி, விஜய் ஒரு முன்மாதிரியாக திகழ வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
எங்களிடம் இருப்பது ‘எலக்ஷன்’ அல்ல ‘எமோஷன்’ என்று விஜய் சொன்னார். ஆனால் தமிழ்நாடு ‘புரமோஷன்’ அடைய வேண்டும் என்றால் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வர வேண்டும்.
விஜய் பேசியதில் அவர் கேட்ட சில கேள்விகள் மிகவும் நியாயமானவை. அதில் குறிப்பாக, ‘மாநில அரசால் முடியாது என்று தெரிந்தும் நீட் விலக்கு என்று உறுதிமொழி கொடுத்தது ஏன்? பெண்களுக்கு 100 ரூபாய் கேஸ் சிலிண்டர் மானியம் கொடுப்பதாக சொன்னீர்களே? கரும்பு கொள்முதலுக்கு 4 ஆயிரம் ரூபாய்க்கு மேல் கொடுப்பதாக சொன்னீர்களே?’ என்பன போன்ற விஜய்யின் கேள்விகள் நியாயமானவை. அதே சமயம் டெல்லி அணி, சென்னை அணி என்று விளையாட்டாக அவர் சொல்வதை விளையாட்டாக விட்டுவிடுங்கள்.”
இவ்வாறு அவர் தெரிவித்தார்.