தமிழக செய்திகள்

சத்குரு ஜக்கி வாசுதேவுக்கு பத்மவிபூஷண் விருது வழங்குவதை எதிர்த்து வழக்கு

சத்குரு ஜக்கி வாசுதேவுக்கு பத்மவிபூஷண் விருது வழங்குவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை 4 வாரத்துக்கு தள்ளிவைத்து ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

சென்னை,

சென்னை ஐகோர்ட்டில், வக்கீல் எம்.வெற்றிச்செல்வன் ஒரு பொதுநல மனுவை தாக்கல் செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

பத்மவிபூஷண் விருது

ஈஷா யோகா மையத்தின் நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவுக்கு, மத்திய அரசு பத்மவிபூஷண் விருது வழங்குவதாக அறிவித்தது. இந்த விருதை பெற ஜக்கி வாசுதேவுக்கு தகுதியில்லை. கோவை மாவட்டம், வெள்ளியங்கிரி மலையில், சுமார் ஒரு லட்சத்து 25 ஆயிரம் சதுர மீட்டர் நிலத்தை சட்டவிரோதமாக அபகரித்து, அவர் ஈஷா யோகா மையத்தை நடத்தி வருகிறார்.

இந்த நிலம் வனத்துறைக்கு சொந்தமானது. இதனால் சட்டவிரோதமாக நிலத்தை ஆக்கிரமித்து கட்டியுள்ள கட்டிடத்தை இடிக்கும்படி தமிழக அரசு 2012-ம் ஆண்டு நோட்டீசு அனுப்பியது.

சட்டத்தை மதிக்காதவர்

அரசின் உத்தரவை மதிக்காமல் உள்ளார். மேலும், மனைவியை கொலை செய்துவிட்டதாக ஜக்கி வாசுதேவ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை அந்த வழக்கு என்ன ஆனது? என்றே தெரியவில்லை.

சட்டத்தை மதிக்காத ஒருவருக்கு பத்மவிபூஷண் விருது வழங்கக்கூடாது. அந்த உத்தரவை திரும்பப்பெற வேண்டும் என்று 2-ந் தேதி மத்திய அரசுக்கு மனு அனுப்பினேன். ஆனால் இதுவரை பரிசீலிக்கப்படவில்லை.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

காலஅவகாசம்

இந்த மனு தலைமை நீதிபதி (பொறுப்பு) ஹூலுவாடி ஜி.ரமேஷ், நீதிபதி கே.கல்யாணசுந்தரம் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், விருதை திரும்ப பெறவேண்டும் என்று மத்திய அரசுக்கு 2-ந் தேதி தான் மனு அனுப்பி உள்ளர்கள். அந்த மனுவை பரிசீலிக்க மத்திய அரசுக்கு காலஅவகாசம் வழங்கப்பட வேண்டும். இந்த மனுவை திரும்பப்பெறுகிறீர்களா? அல்லது விசாரணையை தள்ளிவைக்க வேண்டுமா? என்று கேள்வி எழுப்பினார்கள்.

விருது தொடர்பான அறிவிப்பு ஜனவரி 26-ந் தேதி மத்திய அரசு வெளியிட்டது. அந்த அறிவிப்பு வெளியாகி ஒரு வாரத்துக்குள் கோரிக்கை மனுவை மனுதாரர் அனுப்பிவிட்டார். எனவே, அதை பரிசீலிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

தள்ளிவைப்பு

இதை நீதிபதிகள் ஏற்கவில்லை. பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், கோரிக்கையை பரிசீலிக்க மத்திய அரசுக்கு போதிய காலஅவகாசம் வழங்கப்பட வேண்டும் என்பதால், தற்போது எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது. இந்த வழக்கு விசாரணையை 4 வாரத்துக்கு தள்ளிவைக்கிறோம் என்று கூறினர்.