கோவில்பட்டி,
தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் 116-வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. கடந்த ஆண்டு தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பை தொடர்ந்து சி.பா.ஆதித்தனாரின் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இதனையடுத்து சென்னை எழும்பூரில் சி.பா.ஆதித்தனார் சிலை அருகே வைக்கப்பட்டுள்ள திருவுருவப் படத்திற்கு அமைச்சர்கள் ஜெயக்குமார், பெஞ்சமின், மாஃபா பாண்டியராஜன், பாடநூல் கழகத் தலைவர் வளர்மதி, பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், மாலை முரசு நிர்வாக இயக்குநர் கண்ணன் ஆதித்தன் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இதனை தொடர்ந்து இன்று கோவில்பட்டியில் சி.பா.ஆதித்தனார் உருவப்படத்திற்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ மலர்தூவி மரியாதை செலுத்தினார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், பாமரரும் தமிழ் படிக்க வேண்டும் என்று விரும்பியவர் தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் என்று கூறினார். மேலும் சி.பா.ஆதித்தனார் அவர்கள் பெரியார், அண்ணா ஆகியோர் வழியில் திராவிட இயக்கத்தில் பணியாற்றியவர் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.