தமிழக செய்திகள்

சபாநாயகர் தனபாலுடன் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மூத்த அமைச்சர்கள் ஆலோசனை

சபாநாயகர் தனபாலுடன் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மூத்த அமைச்சர்கள் ஆலோசனை நடத்தினார்.

சென்னை,

பிளவு பட்ட அ.தி. மு.க. இணைந்தது எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக நீடிக்க, ஓ.பன்னீர்செல்வம் துணை முதல்-அமைச்சராக பதவி ஏற்றுக் கொண்டார். கட்சியை வழி நடத்த ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டு குழு அமைக்கப்பட்டு உள்ளது.

அ.தி.மு.க. அணிகள் இணைய வேண்டும் என்று கூறி வந்த டி.டி.வி.தினகரன் தற்போது இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து 19 எம். எல்.ஏ.க்களுடன் தனியாக செயல்பட்டு வருகிறார்.

19 எம்.எல்.ஏ.க்களும் கவர் னர் வித்யாசாகராவை சந்தித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொள்வதாக கடிதம் கொடுத்தனர்.

இதைத் தொடர்ந்து முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெரும்பான் மையை நிருபிக்க உத்தரவிட வேண்டும் என கவர்னருக்கு பல்வேறு கட்சி தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினகரன் அணிக்கு 19 எம்.எல்.ஏ.க்கள் சென்று விட்ட நிலையில் தற்போது எடப்பாடி பழனிசாமி அரசுக்கு 116 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு உள்ளது. அதிலும் கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த தமிமுன் அன்சாரி, கருணாஸ், தனியரசு ஆகியோர் உரிய நேரத்தில் ஒன்றாக முடிவு எடுப்போம் என்று அறிவித்துள்ளனர். அவர்கள் ஆதரவு யாருக்கு என்று தெரியாத நிலையில் 113 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு மட்டுமே உள்ளது.

பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டுமானால் 117 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தேவை. எனவே அரசுக்கு மெஜாரிட்டி ஆதரவை பெறுவதில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்கள்.

இன்று காலை கோட்டையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சபாநாயகர் தனபாலுடன் ஆலோசனை நடத்தினார். அதன் பிறகு அமைச்சர்கள் செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, கடம்பூர் ராஜூ, வைத்திலிங்கம் எம்.பி., அரசு கொறடா ராஜேந்திரன் ஆகியோருடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.

முன்னதாக சபாநாயகரை அமைச்சர்கள் செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் தனித்தனியாக சந்தித்து ஆலோசனை நடத்தினார்கள்.
இதே போல் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது அறையில் கே.பி.முனுசாமி, மனோஜ்பாண்டியன் ஆகியோருடன் தனியாக ஆலோசனை நடத்தினார்.