தமிழக செய்திகள்

சிறப்பு வேளாண் மண்டல வாக்குறுதியை தமிழக ‘பட்ஜெட்’ கூட்டத் தொடரில் சட்டமாக நிறைவேற்ற வேண்டும் - முதலமைச்சருக்கு தி.மு.க. வலியுறுத்தல்

சிறப்பு வேளாண் மண்டல வாக்குறுதியை தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரில் சட்டம் கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும் என்று முதல்-அமைச்சருக்கு தி.மு.க. முதன்மை செயலாளர் கே.என்.நேரு வலியுறுத்தி உள்ளார். இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தினத்தந்தி

சென்னை,

மத்திய பா.ஜ.க. அரசு தனது விருப்பத்திற்கு ஏற்றவாறு தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு அனுமதி அளித்து விட்ட பிறகு, ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு அனுமதி அளிக்க மாட்டோம் என்றும், கிணறுகள் தோண்ட சுற்றுச்சூழல் அனுமதியே பெற வேண்டியதில்லை என மத்திய பா.ஜ.க. அரசு கூறிவிட்ட நிலையில், நாங்கள் ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு அனுமதி வழங்க மாட்டோம் என்றும் முதல்-அமைச்சர் பேசியிருப்பது ஏமாற்று வேலை.

நீட் தேர்வை விட மாட்டோம் என்று தமிழக மக்களை ஏமாற்றியது போல் இன்றைக்கு விவசாயிகளையும் ஏமாற்றிக் கொண்டிருக்கிறார் முதல்-அமைச்சர். காவிரி டெல்டா விவசாயிகளுக்கு செய்துள்ள பச்சை துரோகத்தை திசை திருப்ப, காவிரி டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிக்கப்படும் என்று முதல்-அமைச்சர் சேலத்தில் அறிவித்திருக்கிறார்.

காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிக்கும் முன்பு முதலில் ஹைட்ரோ கார்பன் திட்டங்களை அனுமதிக்க மாட்டோம் என்று ஒரு அமைச்சரவை தீர்மானத்தை நிறைவேற்றிட வேண்டும். ஏற்கனவே வேதாந்தா மற்றும் ஓன்.சி.ஜி.சி. நிறுவனங்களுக்கு தமிழகத்தில் குறிப்பாக காவிரி டெல்டா பகுதிகளில் அளித்துள்ள ஹைட்ரோ கார்பன் திட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும்.

அது மட்டுமின்றி, ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்க மக்கள் கருத்துக் கேட்பு கூட்டமும், சுற்றுச்சூழல் அனுமதியும் தேவையில்லை என்று தமிழக சுற்றுச்சூழல் அமைச்சர் கருப்பண்ணன் எழுதிய கடிதத்தை நாளையே திரும்பப் பெறுவதற்கு முதல்-அமைச்சர் உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இவற்றை எல்லாம் செய்து விட்டு, பிறகு பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிக்கப்படும் என்று இப்போது அளித்துள்ள வாக்குறுதியை மத்திய பா.ஜ.க. அரசுக்கு அஞ்சி பின்வாங்கி விடாமல் வருகின்ற பட்ஜெட் கூட்டத் தொடரிலேயே சட்டம் கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும்.

ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு ஒரு புறம் பணிகள் நடைபெற முழு ஒத்துழைப்பு வழங்கிக் கொண்டு மற்றொரு புறம் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் அறிவிப்பேன் என்று கூறி முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரட்டை வேடம் போட வேண்டாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்