தமிழக செய்திகள்

ராமஜெயம் கொலைக்கும் ஜெயக்குமார் மரணத்திற்கும் தொடர்பா? புதிய தகவல்

அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலையும் ஜெயக்குமார் மரணமும் ஒரே மாதிரியாக இருப்பதாக சிறப்பு புலனாய்வுக் குழுவினருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

தினத்தந்தி

நெல்லை,

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே கரைச்சுத்துபுதூரைச் சேர்ந்தவர் கே.பி.கே.ஜெயக்குமார் தனசிங் (வயது 60). நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவரான இவர், காண்டிராக்டர் தொழிலும் செய்து வந்தார். இவர் கடந்த 4-ந்தேதி காலையில் தனது வீட்டின் பின்புறம் உள்ள தோட்டத்தில் கை, கால்கள் கட்டப்பட்டு  உடல் கருகிய நிலையில் மர்மமான முறையில் பிணமாக கிடந்தார்.

 தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து விசாரிப்பதற்காக, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் மேற்பார்வையில் 10 தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. ஜெயக்குமார் தனசிங் இறப்பதற்கு முன்பாக எழுதிய கடிதங்களைக் கைப்பற்றிய போலீசார், அதில் குறிப்பிட்டுள்ள நபர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். அவரது குடும்ப உறுப்பினர்கள், வீட்டு பணியாளர்கள், ஆதரவாளர்கள் உள்ளிட்டவர்களிடமும் விசாரித்தனர். இறந்தது ஜெயக்குமார் தனசிங் தானா? என்பதை உறுதிப்படுத்துவதற்காக அவரது உடலில் இருந்து எடுக்கப்பட்ட எலும்புகளை மரபணு பரிசோதனைக்காக மதுரைக்கு அனுப்பி வைத்தனர்.

ஜெயக்குமார் தனசிங் இறந்து ஒரு வாரமாகியும் வழக்கில் துப்பு துலங்காததால், கூடுதல் தடயங்களை சேகரிப்பதற்காக மதுரை, கோவையில் இருந்து கூடுதலாக நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு உள்ளனர். அவர்கள், ஜெயக்குமார் தனசிங் இறந்து கிடந்த தோட்டத்தில் நேற்று சல்லடை போட்டு தேடினர். அங்கு கிடந்த அனைத்து பொருட்களையும் சேகரித்து தடயங்களை பதிவு செய்தனர். இதையொட்டி அங்கு பொதுமக்கள் யாரையும் அனுமதிக்காமல், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

ஜெயக்குமார் தனசிங் தோட்டத்தில் தீ வைத்து எரிக்கப்பட்டதால்? கேன்களில் பெட்ரோல் யாராவது வாங்கினார்களா.. என கண்டறிய, தனிப்படை போலீசார் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள பெட்ரோல் பங்க்குகளுக்கு சென்று ஊழியர்களிடம் விசாரித்தனர். அங்குள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளையும் பார்வையிட்டனர். ஜெயக்குமார் தனசிங் மர்மமாக இறந்த வழக்கில் துப்பு துலக்குவதற்காக போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

இதனிடையே, அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலையும் ஜெயக்குமார் மரணமும் ஒரே மாதிரியாக இருப்பதாக வழக்கை விசாரித்து வரும் சிறப்பு புலனாய்வுக் குழுவினருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. ஏனெனில், கடந்த 2012 ஆம் ஆண்டு மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட ராமஜெயத்தின் வாயில் துணி வைத்ததைப் போல் ஜெயக்குமாரின் வாயில் கம்பி பிரஷ் திணிக்கப்பட்டுள்ளது. ராமஜெயத்தை கொலை செய்து எரிக்க முயன்றுள்ளனர். ஜெயக்குமாரை எரித்துள்ளனர். ராமஜெயத்தை கொன்றது போல் ஜெயக்குமாரின் கை கால்களை கட்டி கொலை செய்துள்ளனர். இந்த இரு கொலைகளுக்கும் பல ஒற்றுமைகள் இருப்பதால் ராமஜெயத்தை கொலை செய்த கூலிப்படையினருக்கு ஜெயக்குமார் கொலையிலும் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் சிறப்பு புலனாய்வு குழுவினருக்கு ஏற்பட்டுள்ளது.

அமைச்சர் நேருவின் சகோதரர் ராமஜெயம் கடந்த 2012 ஆம் ஆண்டு நடைபயிற்சி சென்றபோது காரில் கடத்தி கொலை செய்யப்பட்டார். ராமஜெயம் கொலை வழக்கி துப்பு துலங்காததால் தற்போது சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். ராமஜெயம் கொலை செய்யப்பட்டு 12 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், அவரது வழக்கில் குற்றவாளிகள் யாரும் பிடிபடவில்லை. 

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு