ராமநாதபுரம் மாவட்டத்தில் மகளிர் சுயஉதவிக்குழுவினர் பனை ஓலைகளில் செய்து வரும் கண்கவர் தோரணங்கள் கோவில்களை அலங்கரித்து வருகின்றன.
பனை ஓலைகள்
காகிதங்கள் தோன்றாத காலத்தில் மூதாதையர்கள் ஏடுகளின் மூலமே தங்களின் அறிவுத்திறனை வளர்த்து கொண்டனர். இதனால் ஏடுகளே அறிவின் சின்னமாக கருதப்பட்டு வருகிறது. இந்த ஏடுகள் தயாரிக்கப்பட்டது பனை ஓலைகளில் இருந்துதான். இன்னும் சொல்லப்போனால் கூந்தபனைமரம், தாழிப்பனை மரம் போன்றவற்றின் ஓலைகளில்தான் ஏடுகள் தயாரிக்கப்பட்டன. இத்தகைய சிறப்பு மிக்க பனை ஓலைகள் பலன்கள் அளப்பறியதாக உள்ளது.
தற்போது தங்கத்தில் தாலி செய்து அணிவது போல, முன்பு மஞ்சள் கயிற்றில் மஞ்சளை வைத்து தாலியாக கட்டிக்கொண்டனர். அதற்கு முன்னதாக பழந்தமிழர்கள் பனை ஓலையில் மணமகன் பெயரையும், மணமகள் பெயரையும் எழுதி சுருட்டி தாலியாக கருதி மணமகளின் காதில் அணிவித்து விடுவார்களாம். இவ்வாறு பனை ஓலை மனிதர்களின் வாழ்வில் இரண்டற கலந்துள்ளது.
பனை பொருட்களுக்கு கிராக்கி
மனிதர்களின் பயன்பாட்டில் மிக முக்கிய பொருளாக கருதப்பட்ட பனை ஓலை பொருட்கள் மண்ணையும் மனிதனையும் கொல்லும் பிளாஸ்டிக்கின் வரவால் கிட்டத்தட்ட அழிந்து விட்டது. மேலும், விவசாய நிலங்கள் எல்லாம் விலை நிலங்களாக மாறிவிட்டதாலும், பனை மரங்கள் செங்கல் சூளைகளுக்கும் பிற காரணங்களுக்காகவும் விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
பிளாஸ்டிக்கின் பாதிப்பை தாமதமாக உணர்ந்து அதில் இருந்து விலகி மனிதன் தற்போது மீண்டும் பனை ஓலை பொருட்களை நாடிச்சென்று வருகின்றான். இதன்காரணமாக தற்போது பனை ஓலையினால் செய்யப்படும் பொருட்களுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது.
மனத்தை மயக்கும் தோரணங்கள்
தொப்பி, கூடை, விசிறி போன்ற பல பொருட்கள் செய்து வந்த நிலையில் தற்போது காலத்திற்கு ஏற்றாற்போல கைகளால் செய்யப்படும் தோரணங்கள் அதிகளவில் வரவேற்பை பெற்று வருகின்றன. குறிப்பாக கோவில்கள், வீடுகளில் நடைபெறும் விழாக்களில் இந்த தோரணங்கள் தற்போது முக்கியத்துவம் பெற்று வருகின்றன. வண்ண, வண்ண பனை ஓலை தோரணங்கள் மலர்களை போலவே காட்சி அளித்து காண்பவரை மனம்மயங்க செய்து வருகின்றன.
இந்த தோரணங்களுக்கு தற்போது அதிகளவில் கிராக்கி ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக ராமநாதபுரம் மாவட்டம் ரெகுநாதபுரம், சக்திபுரம், பத்ராதரவை உள்ளிட்ட பகுதிகளில் இந்த பனை ஓலை தோரணங்கள் அதிகளவில் தயாரிக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக மகளிர் சுயஉதவிக்குழுவினர் குழுக்களாக இணைந்து இந்த தோரணங்களை தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர். வானுயர வளர்ந்து நிற்கும் பனை மரங்கள் தற்போது மகளிர் சுயஉதவிக்குழுவினரை சொந்தகாலில் நிற்க வைத்து அழகு பார்க்கின்றன.