தமிழக செய்திகள்

தமிழக மீனவர்களை தாக்கி ரூ.2 லட்சம் கொள்ளை இலங்கை கடற்கொள்ளையர்கள் அட்டூழியம்

தமிழக மீனவர்களை கட்டையால் தாக்கி ரூ.2 லட்சம் பொருட்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

தினத்தந்தி

நாகை,

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள ஆறுகாட்டுத்துறை பனங்காட்டு தெருவை சேர்ந்த ஆறுமுகம்(வயது 46) என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் கடந்த 19-ந் தேதி ஆறுகாட்டுத்துறை கடற்கரையில் இருந்து ஆறுமுகம், அவரது மகன் ஜீவன் ஆகிய இருவரும் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர்.

நள்ளிரவில் இவர்கள் மீன்பிடித்துக்கொண்டு இருந்தபோது அங்கு ஒரு பைபர் படகில் இலங்கையை சேர்ந்த 5 கடற்கொள்ளையர்கள் வந்தனர். அவர்களில் 4 பேர் தமிழக மீனவர்களின் பைபர் படகில் ஏறி அவர்கள் கையில் வைத்திருந்த தூண்டில் கம்பால் ஆறுமுகத்தை தாக்கினர்.

பொருட்கள் கொள்ளை

மேலும் படகில் இருந்த ஜி.பி.எஸ். கருவி, செல்போன்கள், லைட் உள்பட மீன்பிடி உபகரணங்களை பறித்துக்கொண்டு தந்தையையும், மகனையும் விரட்டியடித்தனர்.

இதேபோல ஆறுகாட்டுத்துறையை சேர்ந்த சுந்தர்ராஜன்(36) என்பவருக்கு சொந்தமான படகில் 3 மீனவர்கள் இரவில் மீன் பிடித்துக்கொண்டு இருந்தனர்.

அப்போது அங்கு 2 பைபர் படகுகளில் வந்த இலங்கையை சேர்ந்த கடற்கொள்ளையர்கள் 5 பேர், தமிழக மீனவர்களின் படகில் ஏறி குமார் மற்றும் கார்த்திகேயனை படகில் இருந்து கடலுக்குள் தள்ளிவிட்டு படகில் இருந்த டீசல் கேன், லைட் உள்ளிட்ட பொருட்களை எடுத்துக்கொண்டு மீனவர்களை விரட்டியடித்தனர்.

ரூ.2 லட்சம் மதிப்பு

மேலும் தோப்புத்துறையை சேர்ந்த காதர்சேன்(55) என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் ஆறுகாட்டுத்துறையில் இருந்து மீன்பிடிக்க சென்ற 4 மீனவர்களையும் ஆயதங்களுடன் படகில் வந்த கடற்கொள்ளையர்கள் மீனவர் ரமேசின் தோள்பட்டையில் உருட்டுக்கட்டையால் தாக்கியும் படகில் இருந்த பேட்டரிகள், போன் மற்றும் சுமார் 25 கிலோ எடையுள்ள வலைகளை பறித்துக்கொண்டும் அங்கிருந்து சென்று விட்டனர்.

இதைத்தொடர்ந்து 9 மீனவர்களும் நேற்று அதிகாலை ஆறுகாட்டுத்துறைக்கு கரை திரும்பினர். இலங்கை கடற்கொள்ளையர்களால் கொள்ளையடித்து செல்லப்பட்ட மீன்பிடி உபகரணங்களின் மதிப்பு சுமார் ரூ.2 லட்சம் என கூறப்படுகிறது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது