சென்னை,
சட்டசபையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும், தி.மு.க. உறுப்பினர் தங்கம் தென்னரசு அமைச்சர் கே.பாண்டியராஜன் மீது உரிமை மீறல் பிரச்சினையை எழுப்பி தீர்மானம் கொண்டு வந்தார். அவருக்கு சபாநாயகர் தனபால் அனுமதி வழங்கினார். இந்த தீர்மானத்தின் மீது தங்கம் தென்னரசு (தி.மு.க.) பேசினார்.
அப்போது நடந்த விவாதம் வருமாறு:-
தங்கம் தென்னரசு:-தமிழகத்தில் உள்ள இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்குவது சாத்தியம் என்று இந்த அவையில் கடந்த ஜனவரி மாதம் 8-ந்தேதி நடந்த கூட்டத்தில் அமைச்சர் கே.பாண்டியராஜன் கூறியிருக்கிறார். இது சாத்தியம் இல்லை என்று மத்திய மந்திரியே அறிவித்த பிறகும், சட்டசபையில் அமைச்சர் கே.பாண்டியராஜன் இவ்வாறு கூறியிருப்பது அவை உரிமை மீறலாகும்.
வேண்டுமென்றே இந்த விஷயங்களையெல்லாம் தெரிந்திருந்தும் கூட, இலங்கை தமிழர்கள் இங்கே நிரந்தரமாக குடியுரிமை பெற்று விடக்கூடாது, அவர்களுக்கு அந்த பலன் கிடைத்து விடக்கூடாது என்ற உள்நோக்கத்துடன் இந்த அவையை அவர் தவறாக வழி நடத்தி இருக்கிறார். ஓ.சி.ஐ. என்று சொல்லக்கூடிய ஓவர்சீஸ் சிட்டிசன்ஸ் ஷிப் என்கிற அந்த பிரச்சினையையும், இரட்டை குடியுரிமையையும் தவறாக புரிந்து கொண்டு பேசியிருக்கிறார். இந்த அவைக்கு தவறான தகவலை அவர் பதிவு செய்து இருக்கிறார். எனவே அவர் மீது உரிமை மீறல் பிரச்சினையை கொண்டு வருகிறோம். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சபாநாயகர்:-அமைச்சர் கே.பாண்டியராஜன் இதற்கு நீங்கள் விளக்கம் அளிக்கலாம்.
அமைச்சர் கே.பாண்டியராஜன்:-1983-ல் இலங்கையில் உள்நாட்டு கலவரம் வெடிக்கும் வரை 4,51,432 பேருக்கு இந்தியா குடியுரிமை வழங்கியுள்ளது. தமிழகத்தில் உள்ள இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்கப்பட வேண்டும் என்பது தான் அ.தி.மு.க. அரசின் கொள்கை. இலங்கை வடக்கு மாகாண முன்னாள் முதல்-மந்திரி தமிழக அரசின் நிலைப்பாட்டை பாராட்டி சென்று இருக்கிறார். எங்களை பொறுத்தவரையில் கண்டிப்பாக ஓ.சி.ஐ.-ல் அதே வசதிகள் கிடைக்கும். அதேநேரத்தில் ஓட்டு போட முடியாது. ஆனால் இங்கு வந்து சொத்துக்கள் வாங்கலாம். வேலைவாய்ப்பு கிடைக்கும். மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் 2 லட்சம் பேருக்கு ஓ.சி.ஐ. மூலமாக குடியுரிமை அளிக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார். இலங்கை தமிழர்கள் அதனை பெற்று இருக்கிறார்கள். இன்னும் பெறுவதற்கு தடையில்லை. இதில் குடியுரிமையும் அடக்கம்.
இவ்வாறு அமைச்சர் பேசி முடித்ததும் தி.மு.க. உறுப்பினர்கள் எழுந்து நின்று, அமைச்சரின் பதில் திருப்தி அளிக்கவில்லை, இரட்டை குடியுரிமை பற்றி பதில் சொல்லவில்லை என்று கோஷமிட்டனர். அப்போது சபாநாயகர் குறுக்கிட்டு பேசினார்.
சபாநாயகர் தனபால்:-உறுப்பினர், அமைச்சர் மீது உரிமை மீறல் கொண்டு வந்தார். அதற்கு அமைச்சர் பதில் அளித்து விட்டார். இப்போது நான் தீர்ப்பளிக்கிறேன். இந்த பிரச்சினையில் அமைச்சர் கே.பாண்டியராஜன் மீது உரிமை மீறல் எதுவும் இல்லை என்பதை அவைக்கு தெரிவித்துக்கொள்கிறேன்.
இதைத்தொடர்ந்து தி.மு.க. உறுப்பினர்கள் எழுந்து நின்று கோஷமிட்டனர்.
சபாநாயகர்:-நான் தீர்ப்பளித்து விட்டேன். இதற்குமேல் இதை பற்றி யாரும் பேச வேண்டாம். உட்காருங்கள்.
இந்த நேரத்தில் எதிர்க்கட்சி துணைத்தலைவர் துரைமுருகன் எழுந்து தன்னை பேச அனுமதிக்கும்படி கேட்டுக்கொண்டார்.
துரைமுருகன்:-இரட்டை குடியுரிமையை வழங்க முடியாது என்று மத்திய அரசே சொல்லி விட்டது. இதற்கு மேலும் அமைச்சர் பதில் சொல்லுகிறார். நீங்களும் தீர்ப்பளித்து விட்டீர்கள். உங்கள் தீர்ப்பில் நாங்கள் தலையிட மாட்டோம். ஆனால் இதை கண்டித்து நாங்கள் வெளிநடப்பு செய்கிறோம்.
இதைத்தொடர்ந்து தி.மு.க. உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். அவர்களுடன் காங்கிரஸ் உறுப்பினர்களும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினரும் வெளிநடப்பில் ஈடுபட்டனர்.