சென்னை
எழுத்தாளரும் திராவிட சிந்தனையாளருமான திருநாவுக்கரசுவுக்கு சமூக நீதிக்கான பெரியார் விருதும், ஓய்வு பெற்ற நீதிபதி கே.சந்துருவுக்கு டாக்டர் அம்பேத்கர் விருதும் வழங்கப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார்.
ஓய்வுபெற்ற நீதிபதி கே.சந்துரு கிட்டத்தட்ட 90 ஆயிரம் வழக்குகளில் நீதி வழங்கியவர். பெண்கள் கோவில்களில் பூசாரிகள் ஆகலாம், சாதி மதம் இன்றி எல்லோருக்கும் ஒரே சுடுகாடு, தாழ்த்தப்பட்டோருக்கு கோவிலில் வழிபாட்டு உரிமை உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் சமூக நீதியை நிலைநாட்டியவர்.
தாழ்த்தப்பட்ட மக்களுடன் வாழ்ந்து அவர்களின் வாழ்க்கையை நன்கு அறிந்து அவர்களின் நலனுக்காக உழைத்துள்ளார். அவர் எழுதிய 'அம்பேத்கர் ஒளியில் என் தீர்ப்புகள்', 'என் வாழ்க்கை கவனிப்பு: தமிழ்நாட்டில் ஒரு பெண் நீதி மன்றத்தை அணுகும் போது' ஆகிய புத்தகங்கள் சமூகத்தில் பரவலான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.
அண்மையில் வெளியாகி வெற்றிபெற்ற 'ஜெய் பீம்' என்ற திரைப்படம் இவர் வழக்கறிஞராக இருந்தபொழுது எடுத்துக்கொண்ட வழக்கு ஒன்றை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது.
அதேபோல் திராவிட இயக்க ஆய்வாளரும், எழுத்தாளருமான க.திருநாவுக்கரசுக்கு பெரியார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
திருநாவுக்கரசு 1916 முதல் 1944 வரையிலான நீதிக்கட்சியின் வரலாற்றை இரண்டு பகுதிகளாக எழுதியுள்ளார். திருநாவுக்கரசு அவர்கள் 'திராவிட இயக்க வேர்கள்' மற்றும் 'திராவிட இயக்க தூங்கல்' போன்ற இரண்டு குறிப்பிடத்தக்க புத்தகங்களை எழுதியுள்ளார். 2006ல் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியால் அவருக்கு திருவிக விருது வழங்கப்பட்டது.
விருதாளர்களுக்கு பரிசுத்தொகையை ரூ.5 லட்சமாக உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டுள்ள தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், விருது தொகை, தங்கப்பதக்கம், தகுதி உரையுடன் வருகிற 15 ந்தேதி திருவள்ளுவர் தினத்தன்று விருதுகள் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.