சென்னை,
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு சட்டசபை தேர்தல் நெருங்க நெருங்க, பயத்தில் பிதற்றி கொண்டிருக்கிறார் முதல்-அமைச்சர் ஸ்டாலின். இன்று, சென்னை நுங்கம்பாக்கத்தில் நடைபெற்ற ஒரு விழாவில், 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டை தி.மு.க. அழுத்தத்தால் கொண்டு வந்தது போன்ற ஒரு மிக பெரிய பொய்யை கட்டமைத்துள்ளார்.
‘சத்துணவு திட்டம் என்றால் புரட்சித்தலைவர்’ ‘தொட்டில் குழந்தை திட்டம் என்றால் புரட்சித்தலைவி அம்மா’‘7.5 சதவீத உள் இடஒதுக்கீடு என்றால் எனது தலைமையிலான அரசு’ என்று எங்களது சாதனைகளை அடுக்கிக்கொண்டே போகலாம்.
ஏற்கெனவே நான் முதல்-அமைச்சராக இருந்தபோது, சென்னை மாநகராட்சி பள்ளிகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை தனியார் அமைப்பின் உதவியுடன் அமல்படுத்தினோம். இந்த திட்டத்தையே உல்டாவாக்கி இந்த முதல்-அமைச்சர், தான் புதிதாக கொண்டு வந்ததுபோல் தம்பட்டம் அடித்து வருகிறார்.
தான் ஒரு முதல்-அமைச்சர் பதவி வகிக்கிறோம் என்ற எண்ணம்கூட இல்லாமல், வாயை திறந்தால் பொய் சொல்வதையே வாடிக்கையாகக்கொண்டு செயல்படும் ஸ்டாலின் அவர்களின் பேச்சு இனி தமிழக மக்களிடம் எடுபடாது. `பொய்யாலும், விளம்பரத்தாலும் உயர்ந்தவன் வாழ்க்கை நிலைக்காது’ என்பதை ஸ்டாலின் உணரும் காலம் விரைவில் வர உள்ளது. இனியாவது இதுபோன்ற பொய்யை கட்டமைப்பதை உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில், 2026 சட்டசபை தேர்தல் அறிக்கை தயாரிக்கும் தி.மு.க. குழுவின் கருத்து கேட்பு கூட்டம் இன்று ராமநாதபுரத்தில் உள்ள ஓட்டல் பீமாஸில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு, தி.மு.க. துணை பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற தி.மு.க. குழு தலைவருமான கனிமொழி எம்.பி. தலைமை தாங்கி, அனைத்து தரப்பினரிடமிருந்தும் கருத்துகளை கேட்டறிந்து, கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.
இதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கனிமொழி கருணாநிதி எம்.பி., திராவிட முன்னேற்ற கழகத்தின் தேர்தல் அறிக்கையை மக்கள் எப்போதும் நம்பிக்கையுடன் எதிர்பார்க்கிறார்கள். ஏனென்றால் அந்த தேர்தல் அறிக்கையில் கொடுக்கும் வாக்குறுதிகளை நிறைவேற்றக்கூடிய இயக்கம் திராவிட முன்னேற்ற கழகம். தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிகளை முதல்-அமைச்சர் நிறைவேற்றி இருக்கிறார்.
தேர்தல் நேரத்தில் வாக்குறுதிகளாக அறிவிக்காத பலவற்றை நிறைவேற்றி தந்திருக்கக்கூடியவர் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் என்றார்.
அப்போது அவரிடம், ’நித்தம் நித்தம் பொய் சொல்வதாக’ முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, ‘அவரை பற்றி சொல்கிறாரா?’ என்று கேள்வி எழுப்பினார்.
இதேபோன்று தி.மு.க. மற்றும் காங்கிரஸ் தலைமைகளுக்கு இடையில் இணக்கமான நல்லுறவு நிலவுகிறது; கூட்டணிக்கு எந்தவித பாதிப்பும் இல்லை. வரும் சட்டமன்ற தேர்தலில் இரு கட்சிகளும் இணைந்து செயல்படும் என்றும் கூறினார்.