சென்னை,
மு.க.ஸ்டாலின் வாழ்த்து
கடந்த ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டசபை தேர்தலின் போது வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியதற்காக, தந்தி டி.வி.க்கு சிறந்த தொலைக்காட்சிக்கான தேசிய விருதை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நேற்று முன்தினம் வழங்கினார்.
தேசிய விருது பெற்ற தந்தி டி.வி.க்கு தி.மு.க. செயல் தலைவரும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து இருக்கிறார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
விழிப்புணர்வு
தமிழ் இதழியல் துறையில் எளிய மக்களின் நண்பனாக விளங்குவது தினத்தந்தி நிறுவனம். பெருமைமிக்க அந்த நிறுவனத்தின் தொலைக்காட்சி ஊடகமான தந்தி டி.வி., கடந்த 2016ம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில், வாக்காளர்களுக்கு சிறந்த முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தியதற்காக, குடியரசு தின விழாவில் விருது பெற்றுள்ளமைக்கு மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
தலைநகர் டெல்லியில் இந்த விருதினை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வழங்கி, தந்தி டி.வி. குழும நிர்வாக இயக்குனர் பாலசுப்பிரமணியன் ஆதித்தன் பெற்றுக்கொண்டுள்ளார்.
சென்னை போன்ற இடங்களில், கடந்த தேர்தலில் வாக்குப்பதிவு குறைந்துள்ள நிலையில், தந்தி டி.வி.யின் பணி இன்னும் அதிகமாகத் தேவைப்படுகிறது. ஊடகத்துறையில் தந்தி குழுமம் இன்னும் பல சாதனைகளை நிகழ்த்தி, பல விருதுகளைப் பெறவும், மக்கள் நலனில் அக்கறை கொண்ட செய்திகளை தொடர்ந்து வெளியிடவும் வாழ்த்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.