சென்னை,
ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அவருடைய அண்ணன் மகள் தீபா அரசியலுக்கு வர வேண்டும் என்று அ.தி.மு.க. தொண்டர்கள் விரும்பினர். சென்னை தியாகராயநகர் சிவஞானம் தெருவில் உள்ள அவருடைய இல்லத்தில் தினமும் நூற்றுக்கணக்கான தொண்டர்கள் தீபாவை சந்தித்து ஆதரவு அளித்தனர். இதையடுத்து தனது ஆதரவாளர்களின் கருத்துக்கிணங்க அரசியல் களத்தை தீபா தேர்ந்தெடுத்தார்.
கடந்த மாதம் நடைபெற்ற எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழாவின்போது தீபா தனது அரசியல் பிரவேசத்தை தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்போது அவர் எந்த முடிவையும் அறிவிக்கவில்லை.
இதற்கிடையே சசிகலாவுக்கு எதிராக போர்கொடி தூக்கிய ஓ.பன்னீர்செல்வத்துக்கு தீபா நேரில் சென்று ஆதரவு அளித்தார். இதன்மூலம் ஓ.பன்னீர்செல்வத்துடன் இணைந்து தீபா அரசியல் பாதையில் பயணிப்பார் என்று பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால் தனது ஆதரவாளர்களின் விருப்பத்துக்கு ஏற்ப தன்னுடைய முடிவை தீபா திடீரென்று மாற்றிக் கொண்டார்.
இதையடுத்து ஜெயலலிதா பிறந்தநாளான நேற்று புதிய பேரவை தொடங்குவேன் என்று தீபா அதிரடியாக அறிவித்தார். மேலும் தனது வீட்டின் கீழ் தளத்தில் பேரவை அலுவலகம் திறக்கப்படும். பேரவையின் பெயர், கொடி அறிமுகம் செய்யப்படும். நிர்வாகிகள் அறிவிக்கப்படுவார்கள் என்றும் தீபா கூறினார். அதன்படி, ஜெயலலிதா பிறந்தநாளான இன்று தன்னுடைய வீட்டின் கீழ் தளத்தில் பேரவை அலுவலகத்தை தீபா திறந்து வைத்தார்.
சென்னை தியாகராயநகர் சிவஞானம் தெருவில் உள்ள தன்னுடைய இல்லத்தில் நேற்று மாலையில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, அவர் தன்னுடைய பேரவை பெயர் எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவைஎன்று அறிவித்தார்.எம்.ஜி.ஆருக்கு ஜெயலலிதா செங்கோல் வழங்கும் உருவங்கள் பொறிக்கப்பட்ட பேரவை கொடியையும் அறிமுகம் செய்து வைத்தார்.
இரட்டை இலையை மீட்க வேண்டும் அம்மா ஆட்சியை மீண்டும் அமைப்பதே இந்த பேரவையின் முக்கிய நோக்கம் என கூறினார்.
பின்னர் பேரவை தீர்மானங்களை வாசித்தார்.
* அம்மாவின் அரசியல் வாரிசாக நான் இருக்க வேண்டும் என தொண்டர்களின் கோரிக்கைக்கு ஏற்ப பணிகளை தொடர இருக்கிறேன்.
* எனது தலைமையை ஏற்கும் கோடான கோடி அ.தி.மு.க உண்மையான தொண்டர்களுடன் இரட்டை இலையை மீட்போம்.
* எனது அரசியல் பயணம் தொடங்கி உள்ளது. ஆதரவளித்த தொண்டர்களுக்கும், மக்களுக்கும் நன்றி
* தற்போதைய அரசியல் சூழ்நிலையில் ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்டு உள்ளது